இலங்கையில் வீடுகள், நகையகங்களை உடைத்து கோடிக்கணக்கான பணம், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட யாழ்ப்பாண குழு கம்பளைப் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று நாட்டின் பல பகுதிகளிலும், வீடுகள் மற்றும் நகையகங்களை உடைத்து கோடிக்கணக்கான பணம், தங்க ஆபரணம், கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மேலும் பல பொருள்களைக் கொள்ளையிட்ட குழுவொன்று கம்பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, கலஹா மற்றும் நுவரெலியா, கந்தபொல ஆகிய பகுதிகளில் இந்தக் குழு கொள்ளையில் ஈடுபட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நகையகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொலைபேசி விற்பனை நிலையங்களே கொள்ளைக் கும்பலின் பிரதான இலக்காக இருந்துள்ளது.
யாழ். நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மாத்திரம் இந்தக் குழுவினருக்கு 9 பிடியாணை உத்தரவுகள் உள்ளன என்று கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 வருடங்களாக நாட்டின் பல பகுதிகளில் வாடகைக்கு வீடுகளை எடுத்துத் தங்கியிருந்து இந்தக் கொள்ளைகளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 19 தொடக்கம் 26 வயதுடையவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.