பிரிட்டன், இணை அனுசரணை நாடுகளால் தயாரித்த பிரேரணை புதன்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறும்
இலங்கை தொடர்பில் ஏற்கனவே மேலும் ஓராண்டுக்கு கால நீடிப்பு நிறைவேற்றப்பட்ட 51/1தீர்மானத்தை செய்யக் கோரி பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
ஜெனிவாவில் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது.
அதன்படி கூட்டத் தொடரின் தொடக்க நாளான கடந்த மாதம் 9 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பு நாடு களின் பங்கேற்புடன் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெற்றது.
இது இவ்வாறிருக்க, "இலங்கையில் நல்லிணக்கம். பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 51 ஆவது கூட்டத் தொடரின்போது மீண்டும் கால நீடிப்பு செய்யப்பட்டு தற்போது 51/1 தீர்மானம் எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தத் தீர்மானம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் ஒன்றிணைந்து 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குக் கால நீடிப்பு செய்வது குறித்து ஆராய்ந்தன.
அதற்கமைய “இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்“எனும் தலைப்பில் இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட முதல் வரைபுக்கு சகல தரப்பினரதும் ஒப்புதல் பெறப்பட்டு, அதனைப் பெரும்பாலும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் இந்தப் பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும், பெரும்பாலும் வாக்கெடுப் பின்றி நிறைவேற்றப்படும் எனவும், இவ் விவகாரத்தில் நெருங்கிப் பணியாற்றிவரும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.