சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வவுனியாவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதியன்று வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய குறித்த பேரணி பழைய பேருந்து நிலையப் பகுதியில் முடிவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த உறவுகள்….
சர்வதேச மனித உரிமைகள் நாளாக உலகம் தோறும் இன்று (10) அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேசமும் அனைத்துலகமும் ஈழத்தமிழரை கைவிட்ட நிலையில் மனிதர்களாக எம்மை பார்ப்பதில்லை.
எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. நமக்கு சர்வதேச நீதி வருமா? என்ற கேள்வியோடு இந்த தினத்தில் நாம் போராடி வருகிறோம்.
உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத நிலையில் ஐ.நா அனைத்துலக சாசனத்துக்கு அமைய ஐக்கிய நாடுகளின் அவையின் கீழ், சர்வதேச நீதிப் பொறிமுறையை நாடி நிற்கின்றோம்.
எங்கள் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களே! அவர்கள் காணாமல் போனவர்கள் அல்ல.
இன்று குழந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வரிசையில் இலங்கை சர்வதேச ரீதியில் முதலாம் இடத்தில் இருக்கிறது.
எமது 40ற்கு மேற்பட்ட குழந்தைகளின் முகங்கள் இன்றும் எம் கண்முன்னே அழியாத உயிர்ப்புக்களாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
இறுதிப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வரிசையில் இந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்ற விம்மலும் கண்ணீரும் இன்னும் எம்மை வருத்துகிறது.
எமக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை நாம் சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
இது அன்னையர் தினமோ, ஆசிரியர் தினமோ அல்ல, அவ்வாறு கூறி கடந்து செல்ல முடியாது.
இது மனித உரிமைகள் தினம். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். எம் உயிருக்கும் மேலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் எம்மையும் மதிக்க வேண்டும். மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
ஆனால், இலங்கையில் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 300க்கும் அதிகமான உறவுகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உறவுகளை இனி யார் தேடுவது.
எப்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கிடைத்து எம்மைப் போல் அழுபவர்களின் குரல் ஓய்கிறதோ, அன்று தான் எமக்கு மனித உரிமைகள் தினம் என வலியுறுத்தி நிற்கின்றோம் என்றனர்.