மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாடில் 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் நாளை.

4 months ago


'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் நாளை சனிக்கிழமை (07) நடைபெறவுள்ளது.

கட்டம் கட்டமாக நடைபெறவுள்ள இப்பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதாக 38 வேட்பாளர்களில் 16 பேர் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்கலாக 22 பேர் தமது பங்கேற்பை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை.

நாட்டில் தூய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய 'மார்ச் 12' இயக்கமானது, அந்த இலக்கை அடைந்துகொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக வேட்பாளர்களின் பங்கேற்புடனான பகிரங்க விவாதமொன்று மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

அதன் நீட்சியாக இம்முறையும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் பங்கேற்புடனான பகிரங்க விவாதத்தை நடத்துவதற்கும், அதனை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்புவதற்கும் மார்ச் 12 இயக்கம் உத்தேசித்துள்ளது.