யாழ்.தென்மராட்சி - கரம்பகம் பிரதேச வீதியில் மண் அகழ்வதை கண்டித்து பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
2 weeks ago
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் இன்று(22) போரட்டத்தில் ஈடுபட்டனர்.
கரம்பகத்திலுள்ள விடத்தற்பளை - கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த விவசாய வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது.
பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்வதற்கு சிறந்த வீதியாக இதனையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தின் உதவி கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் மண் அகழப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற போதிலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.