சமரச அரசியலிலேயே ஈடுபடவேண்டும்.-- தமிழ் அரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் ந. ரவீந்திரகுமாரன் தெரிவிப்பு

2 months ago



இதுவரை காலமும் எதிர்ப்பு அரசியல் செய்ததால் எமது மக்கள் சந்தித்த வலிகள் - வடுக்கள் நிறையவே உள்ளன.

ஆகவே, வலிகள் வடுக்களை குறைக்க வேண்டுமானால் சமரச அரசியலிலேயே ஈடுபடவேண்டும் இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர் ந. ரவீந்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றின் கருத்தாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், “உங்களுடைய அரசியல் எதிர்ப்பு அரசியலா? இணக்க அரசியலா?”, என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தென்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம்தான் என்னை அரசியலில் ஈடுபடுவதற்கு இழுத்திருக்கிறது.

இதே போல, வன்னியில் மக்கள்பட்ட வலிகளையும் மண்பட்ட வடுக்களையும் நீக்க வேண்டுமாக இருந்தால் சில சந்தர்ப்பங்களில் தென்பகுதி அரசியலின்              கொள்கைகள், சித்தாந்தங்களை ஏற்று அவர்களுடன் இணைந்து செல்வது நிச்சயம் தேவைப்படும்" - என்றார்.

"எதிர்காலத்தில் தமிழ் அரசுக் கட்சி அமைச்சுகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமா?”, என்று மற்றொரு தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரகுமாரன்,

"மக்கள் அவ்வாறான கோரிக்கையை முன்வைத்தால் அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சுகளை பொறுப்பேற்கும் முடிவுகளை எடுக்கத் தயங்கமாட்டோம்.

இதுவரை காலமும் எதிர்ப்பு அரசியல் செய்ததால் எமது மக்கள் சந்தித்த வலிகள் - வடுக்கள் நிறையவே உள்ளன.

ஆகவே, வலிகள், வடுக்களை குறைக்க வேண்டுமானால் சமரச அரசியலுக்கு முன்வரவேண்டும்”, என்றார். 

அண்மைய பதிவுகள்