தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெறுகிறது.
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(30) கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கலந்துரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள இந்த தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், டெலோ அமைப்பினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ப்ளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது அடுத்த தேர்தலில் தமிழ் தரப்பினர் அனைவரையும் இணைத்து களம் காண வைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது என அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.
முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.