ஐனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது என கட்சி முடிவெடுக்கும் - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியாகிய பின்னரே எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனத் தமிழரசுக் கட்சி முடிவெடுக்கும்.

அதுவரையில், பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகிய மூவரையும் சம அளவிலேயே பார்த்துச் செயற்படுவது என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று(27) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது மேற்கண்டவாறு கூறிய சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதித் தேர்தல் குறித்து எங்களுடைய கட்சியின் மத்திய செயற்குழு கடந்த வாரம் கூடிப் பேசியபோது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திலே அது சம்பந்தமான முடிவை நாங்கள் எடுப்பதாகவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களினதும் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்துவிட்டு அதன் பின்பு சரியான தீர்மானம் எடுக்கப்படும்.

இப்போது இருக்கின்றவர்களில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் ரணில், சஜித், அநுர என்ற மூவரையும் நாங்கள் இப்போது சமதூரத்தில் வைத்துப் பார்த்துச் செயற்படுவோம் என்று தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.

அப்படி அவர்களைச் சமதூரத்தில் வைத்து நாங்கள் செயற்படுவதாக இருந்தால் எந்தவொரு வேட்பாளர் நியமனத்தையும் நாங்கள் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.

அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் ஒரே தூரத்தில் வைத்துத் தான் நாங்கள் செயற்படுவோம்.

குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணம் வந்தபோது அவரது கூட்டத்தில் பங்குபற்றியிருந்தேன். அதன்போது அவரோடும் பேசியிருந்தேன்.

ரணில் விக்கிரமசிங்க இங்கு வந்த போதும் கூட அரச நிகழ்வுகளிலே நாங்கள் பங்குபற்றியிருக்கின்றோம்.

ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் வரு கின்ற சூழ்நிலையிலும் எவரையும் நாங்கள் சந்திப்போம். குறிப்பாக சஜித் பிரேமதாஸ வடக்குக்கு வந்தால் அவரையும் சந்திப்போம்.

இவர்களைத் தவிர வேறு வேட்பாளர்கள் வந்தால் அவர்களையும் நாங்கள் சந்திப்போம்.

இப்படி அனைவரையும் சந்தித்துப் பொது வெளியிலே உரையாடி வெளிப்படைத் தன்மையோடு மக்களிடத்தே நாங்கள் நடாத்திய உரையாடல்களையும் தெரிவித்து மக்களுடன் கலந்தாலோசித்து சரியான தீர்மானத்தை நாங்கள் எடுப்போம் என்பதையும் உறுதியாகச் சொல்லிவைக்க விரும்புகிறோம் என்றார்.