தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி தண்ணீர் திறக்கவுள்ளோம் - கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவிப்பு

5 months ago


தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி தண்ணீர் திறக்கவுள்ளோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டில்லியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், “தமிழகத்துக்கு கர்நாடக அரசு 1 டி.எம்.சி. காவிரி நீரை ஜூலை 31 ஆம் திகதிக்குள் திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக அமைச்சரவையை கூட்டி, தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என தெரிவித்தார்.

மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவை எதிர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடப் போகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இதன் அடுத்தகட்டமாக, காவிரி நீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுப்பதற்காக சித்தராமையா தலைமையில் அம்மாநில அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. துணை முதல்வரும் நீர் பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், பா.ஜ.க, ம.ஜ.த, கர்நாடக மாநில விவசாய சங்கம், கன்னட அமைப்பினர், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது.எனினும், கூட்டத்தின் இறுதியில், ஒழுங்காற்றுகுழு பரிந் துரையின்படி, தமிழகத்துக்கு 1 டி.எம்.சி. நீரை திறந்து விடுவதுக்கு பதிலாக, தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு 8,000 கனஅடி தண்ணீர் திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வோம் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டது."-என்றார்.

மேலும், தமிழகத்துக்கு இன்று முதல் 8,000 கன அடி காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

அண்மைய பதிவுகள்