வடக்கில் காணிப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.-- ஜே.வி.பி ரில்வின் சில்வா தெரிவிப்பு
வடக்கில் காணிப் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
அதனை தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தெற்கில் இல்லாத பல பிரச்னைகள் வடக்கில் உள்ளன.
இவற்றுக்கு 13 மட்டும்தான் தீர்வல்ல. மொழிப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ரில்வின் சில்வா தெரிவிக்கையில்-
வடக்கு-கிழக்கில் தேசிய மக்கள் சக்தியாக நாம் முழு அளவில் செயற் படவில்லை.
இதனால் தான் தேர்தலின்போது முழு அளவில் வாக்குகள் கிடைக்கவில்லை.
எனினும், கடந்த காலங்களை விட இம்முறை வாக்குகள் அதிகரித்துள்ளன.
அவற்றை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படும்
வடக்கு - கிழக்கில் இருந்தும் எமது கட்சி சார்பில் தலைவர்கள் உருவாக வேண்டும்.
நாம் முகவர்கள் ஊடாக வடக்குக்கு வரவில்லை. நேரடியாக வந்தோம். அப்படி இருந்தும் மக்கள் எமக்கு வாக்களித்தனர்.
வடக்கில் காணி உட்பட பல பிரச்னைகள் உள்ளன.
எனவே, காணி கச்சேரி உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இக்காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
அங்கு வாழும் மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும்.
தமது தாய்மொழியில் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இருக்கவேண்டும் - என்றார்.