கூட்டணி என்றால் அடிமைகள் இல்லை- கடுமையாக சாடும் விடுதலைச் சிறுத்தைகள்

6 months ago

தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநிலக் கட்சி அந்தஸ்தை சாதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கட்சி மேற்கொள்ளும் அரசியல் நிலைப்பாடுகள், தி.மு.க.வை சங்கடத்தில் தள்ளி வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளும், கூட்டணிக் கட்சிகளும் திமுக ஆட்சியின் மீதும், காவல்துறையின் நடவடிக்கை தொடர்பாகவும் விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கின.

இதில், திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடுமையான நிலையெடுத்து பேச தொடங்கியது. கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை தெரிவித்த போது, கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அதனை உடனடியாக மறுத்தார்.

"கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காவல்துறை விளக்கம் கூறும்போது சாட்சியங்களை திரட்டியே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை மறுப்பவர்கள் தங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் இறுதி நிகழ்வில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியுடன் பங்கேற்று பேசிய திருமாவளவன், “இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது தான் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் முன் வைக்கும் கோரிக்கை. அதனாலேயே மாயாவதி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவதற்கான கட்டாயம் எழுந்துள்ளது. எனவே காவல்துறை இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும், இதற்கு பின்னால் உள்ள கூலிப்படையினர் யார்? அவர்களின் பின்னணி என்ன என்பதை கண்டறிய வேண்டும். இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தலித் தலைவர்கள், சிறிய அளவில் இருந்தாலும், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது” என்று பேசினார்.

சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை முகமைகள் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக, இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாஜகவிற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் அதிமுகவும், பாஜகவும் சிபிஐ விசாரணை கேட்டு போராடுகின்றன. இப்போது அந்த வரிசையில் விசிகவும் இணைந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய மரணங்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்திலும் திருமாவளவன் திமுகவை நோக்கி விமர்சனத்தை முன்வைத்தார்.

“முழு மதுவிலக்கு தேசிய அளவில் கடைப்பிடிக்க வேண்டும்” என்ற திருமாவளவன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை வைத்து கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாது என்றார்.

“தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு முன்பே, புதுச்சேரியில் அரசு மது பானக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், அங்கு அரசு மதுபானக் கடைகளுக்கு இணையாக கள்ளச்சாராயக் கடைகள் இருக்கின்றன. அரசு கடைகள் இருப்பதால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுப்பதாகக் கூறியே 2003-ம் ஆண்டு அதிமுக காலத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அப்போது 3 ஆயிரம் கோடிக்கு விற்பனையானது தற்போது , 45ஆயிரம் கோடிக்கு விற்பனையாகிறது” என்று திமுக ஆட்சியில் மது விற்பனை அதிகரித்திருப்பதை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக கேட்டபோது, ‘வெவ்வேறு கட்சிகள் என்றால் வெவ்வேறு கருத்துகள் இருக்க தானே செய்யும்’ என்று விளக்கினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார். மேலும் அவர் “கூட்டணி கட்சிகள் என்றால் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. அது மிக தவறான பார்வை” என்று கூறினார்.

தி.மு.க கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை என்று மறுக்கும் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விமர்சனங்களை ஏற்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடும் அவர், “இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை பாஜக மேற்கொள்கிறது” என்றார்.

பூரண மதுவிலக்கு தொடர்பாக கேட்டபோது, அது சாத்தியமற்றது என்று மறுத்த அவர், “குடிக்காதவர்கள் மட்டும் தான் கட்சியில் இருக்க வேண்டும் என்று கூற முடியுமா? அப்படி கூறினால் எத்தனை பேர் கட்சியில் இருப்பார்கள். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்திலும் மது குடித்து உயிரிழப்பவர்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுகவின் அணிக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் செல்ல வாய்ப்புள்ளதுதானே என்று கேட்டபோது, ‘அதிமுக பலவீனமாக உள்ளதால் யாரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை’ என்றார் டி கே எஸ் இளங்கோவன். மேலும், “அதிமுக தலைவர் இல்லாத கட்சி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களால் வலுப்பெற முடியாது” என்று கூறினார்.

பட்டியல் சமுதாய மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்காவிட்டால் திருமாவளவன் தனிமைப்படுத்தப்படுவார் என்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

“திருமாவளன், தனது உளக் குமுறல்களை இப்போது வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க முடியாதல்லவா? விசிக எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவும் பாஜகவும் தான் எங்கள் எதிரி. அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

தி.மு.க, அதிமுக அல்லாத வேறொரு அணியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்விக்கு, “இந்த நிமிடம் வரை விசிக வேறு அணியை நோக்கிச் செல்ல வாய்ப்பில்லை. இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி அமைக்க திமுக விரும்பினால் அதனால் விசிக அணியை விட்டு வெளியேற நிர்பந்தம் ஏற்படும்” என்கிறார் பேராசிரியர் வீ.அரசு.

தி.மு.க.வை வீழ்த்துவதற்காக எந்த அணியும் இணையக் கூடும் என்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், “கூட்டணியே வேண்டாம் என்ற சீமான், தம்பி விஜய்யுடன் சேர விருப்பம் என்கிறார். அதிமுக உண்ணாவிரதத்துக்கு நான்கு பிரதிநிதிகளை நேரில் அனுப்பி வைத்து ஆதரவு தெரிவிக்கிறார். சீமானும் விஜய்யும் இணைவார்களா, இணைந்து அதிமுகவுடன் கூட்டணி வைப்பார்களா என்பது இப்போது தெரியாது” என்றார்.

அதே சமயம், ஆட்சியை தக்க வைப்பதற்கான தேர்தல் என்பதால் 2026 தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியம், வி.சி.க தன்னுடைய கூட்டணி முடிவை இப்போது எடுக்காது என்கிறார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன்.

மேலும் அவர் “தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் சுயநலன், கட்சி நலன் கருதி எடுக்கப்படும் முடிவு. தேர்தல் நேரத்தில் பேசாமல் மௌனம் காத்த விசயங்களைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவார்கள். மாயாவதி சி பி ஐ விசாரணை வேண்டும் என்று கூறும் போது, அதே மேடையில் திருமாவளவன் வேண்டாம் என்றா கூற முடியும்?” என்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவும் கூட விரும்பும் என்கிறார் அவர், “உத்தர பிரதேசத்தில் செய்தது போல தலித்துகளை தங்கள் பக்கம் ஈர்க்க பாஜக முயன்று வருகிறது. அதற்கு விசிகவினர் இணங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு வேளை அதிமுக, பாஜக என எல்லோரும் இணைந்து ஒரு அணி அமைத்தால் திமுகவுக்கு அது சவாலாக இருக்கும்” என்றார் வீ.அரசு.

நன்றி- BBC







அண்மைய பதிவுகள்