மலையகத் தமிழர்களின் அவலங்களுக்கு மலையக அரசியல் கட்சிகளே காரணம் என ஜே.வி.பி. காட்ட முயல்கின்றது.--மனோகணேசன் குற்றச்சாட்டு

2 months ago




மலையகத் தமிழர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் அவலங்களுக்கு மலையக அரசியல் கட்சிகளே முற்று முழுதான காரணம் என ஜே.வி.பி. காட்ட முயல்கின்றது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு:-

"மலையக அவலங்களுக்கு ஒரு பிரதான காரணமும், ஒரு துணைக் காரணமும் என இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

பிரதான காரணம்:

சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள், 1950 களிலிருந்து அப்பாவி சிங்கள மக்கள் மத்தியிலே மலையக மக்களுக்கு எதிராகப் பேரினவாத சிந்தனையை விதைத்தது.

இதற்குள் ஜே.வி. பி. என்ற இன்றைய என்.பி.பி., மலையகத் தமிழர்களை, வகுப்பு நடத்தி, அந்நியர்களாக அடையாளம் காட்டியது.

இந்திய ஏகாதிபத்தியத்தின் அம்சமாக மலையகத் தமிழர்களைக் காட்டியது.

துணைக் காரணம்:

மலையகத்தில் ஒரு பிற்போக்குக் கும்பல், மாறி மாறி வந்த எல்லா அரசுகளிலும் சுமார் 45 வருடங்கள் அங்கம் வகித்து, மலையகத் தமிழர்களை ஏமாற்றியது.

இந்த வரலாற்றுப் பின்னணியில், 2015ஆம் ஆண்டு தோன்றிய மலையக முற்போக்கு அணிதான், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகும்.

நாம் நாற்பது வருடங்கள் ஆட்சியில் இருக்கவில்லை. ஆக, நான்கே வருடங்கள்தான் நாம் ஆட்சியில் இருந்தோம்.

எமது காணி உரிமையை    அமைச்சரவைக்குக் கொண்டு சென்று எமது முற்போக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

தேசிய அரங்கில் மலையக மக்களின் அபிலாஷைகளை மலையக சாசனமாக முன்வைத்தோம்.

அதில் காணி உரிமை எமது பிரதான கோஷம்.

ஆனால், ஜே.வி.பி. என்ற இன்றைய என்.பி.பி., மலையகத்தின் முற்போக்கு அணியையும், பிற்போக்குக் கும்பலையும் ஒரே கூடையில் போட்டு பிரசாரம் செய்கின்றது.

இது ஒரு அரசியல் கபடத் தனம்.

இதற்கு இந்தக் கட்சியில்    இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மலையக தமிழ் நபர்கள் விடயம் விளங்கியும், விளங்காமலும் துணை போகின்றார்கள்.

இந்தப் புதிய புரட்சியாளர்களை வைத்து மலையக அரசியல்வாதிகளைக் கரித்து கொட்டச் செய்து ஜே.வி.பி. தனக்குத் தானே கைதட்டிக் கொள்கின்றது.

மலையக பிற்போக்குக் கும்பலை விரட்டி அடியுங்கள்! நாங்கள் அதைத் தான் செய்து கொண்டு இருக்கின்றோம். ஆனால், எங்களை நோக்கி வராதீர்கள்.

பெருந்தோட்ட மலையக மக்களின் காணி உரிமை பற்றி திட்டவட்டமாக எதுவும் பேசாமல், ஜே.வி.பி. தலைமை கள்ள மௌனம் காக்கின்றது.

சும்மா மலையக மக்கள் தொடர்பில் அனுதாப வார்த்தைகளை மாத்திரம் பேசி வாக்குச் சேர்க்கின்றது.

நான் பலமுறை நாடாளுமன்றத்திலும், வெளியேயும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமாரவை விளித்துக் கூறியுள்ளேன்.

இப்போதும் கூறுகிறேன். "நண்பர் அநுர, எமக்கு அனுதாபம் வேண்டாம்! நியாயம்தான் வேண்டும்!" - என்றுள்ளது.