யாழ்.உரும்பிராயில் நிலத்தில் இருந்த நகையை எடுத்து வெதுப்பகத்தில் கொடுத்தவரை கட்டி வைத்து அடித்த 5 பேர் கைது

1 day ago



யாழ்.உரும்பிராயில் நிலத்தில் இருந்த நகையை எடுத்து வெதுப்பகத்தில் கொடுத்தவரை கட்டி வைத்து அடித்த 5 பேர் கைது

உணவு வாங்க வந்த கூலித்தொழிலாளி நிலத்தில் கிடந்த தங்க ஆபரணத்தை மீட்டு, 'எவராவது தேடிவந்தால் கொடுங்கள்' என வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், இளைஞர் குழு அவரைக் கட்டி வைத்துத் தாக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் - உரும்பிராய்ப் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித்தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை மீட்டு, 'எவராவது தேடிவந்தால் கொடுங்கள்' என வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், இளைஞர் குழு அவரைக் கட்டி வைத்துத் தாக்கி வீடியோ வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாவது:-

டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்குச் சென்ற நிலையில் நிலத்தில் தங்கநகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன்.

அதனை குறித்த வெதுப்பகத்தில் ஒப்படைத்தேன்.

இரண்டு நாள்களின் பின்னர், அந்த வெதுப்பகத்துக்கு நான் சென்று 'ஆபரணத்தை உரியவர்களிடம் வழங்கினீர்களா?' என்று வினவினேன். அவர்கள் 'இல்லை' என்று தெரிவித்தனர் .

அதன் பின்னரும் இரண்டு நாள்கள் சென்ற நிலையில், வெதுப்பகத்துக்கு மீண்டும் சென்று, 'ஆபரணத்தை உரியவர்களிடம் வழங்கினீர்களா?' என்று வினவினேன். அப்போதும் அவர்கள் 'இல்லை' என்றே தெரிவித்தனர்.

இதையடுத்து, 'ஆபரணத்தைத் தாருங்கள். ஏதாவது சிறுவர் இல்லத்துக்கு வழங்குவோம்' என்று நான் கூறினேன்.

இதையடுத்தே, அந்த வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்துத் தாக்கினார்கள். என்னைத் தாக்க வேண்டாம் என்று நான் மன்றாட்டமாகக் கேட்ட போதிலும், ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் என்னைக் கட்டி வைத்துக் கடுமையாகத் தாக்கியதுடன் அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

காயமடைந்த நான் கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கிவிட்டு, மருத்துவமனைக்கு அம்புலன்ஸில் சென்றுவிட்டேன்.

எனினும், என்னைத் தாக்கியவர்களை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்யவில்லை.

பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர், 'சமாதானமாகச் செல்லுங்கள்' என்றார்.

எனக்கு நியாயம் வேண்டும் என்னைத் தாக்கியவர்களை கைதுசெய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன் - என்றார்.

நேற்று இரவு வரையிலான தகவல்களின் அடிப்படையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் கோப்பாய் பொலிஸாராலும், இருவர் யாழ்ப்பாணப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது.