கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரத்தில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 month ago



கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் இந்தியர்கள் நான்குபேர் உயிரிழந்த விவகாரத்தில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 24ஆம் திகதி கனடாவின் ரொரன்றோவில் வேகமாக சென்றுகொண்டிருந்த டெஸ்லா கார் ஒன்று, சாலையின் நடுவிலிருந்த தடுப்புச்சுவரில் மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த Rick Harper என்பவர், இரும்புக் கம்பி ஒன்றின் உதவியால், கார் ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து, காரிலிருந்த 20 வயதான ஒரு இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.

ஆனால், காருக்குள் கரும்புகை சூழ்ந்திருந்ததால், மேலும் நான்கு பேர் காருக்குள் சிக்கி, தப்பிக்க போராடிக்கொண்டிருந்ததை தான் உணரவில்லை என்று கூறியுள்ளார் ரிக்.

உயிர் தப்பிய அந்த இளம்பெண்ணின் நண்பர்களான Neelraj Gohil (25), அவரது சகோதரியான Ketaba Gohil (29), Jay Sisodiya என்பவர், மற்றும் Digvijay Patel ஆகிய நான்குபேரும் இந்த கோர விபத்தில் உடல் கருகி பலியாகிவிட்டார்கள்.

இந்நிலையில், கார் விபத்தில் உயிர் தப்பிய ஒரே இளம்பெண்ணைக் காப்பாற்றியவரான நிக், விபத்து குறித்து சில விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

காருக்குள் இருந்த அந்த இளம்பெண், கார் கதவைத் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்ததை தான் கண்டதாக தெரிவிக்கும் ரிக்,

தான் இரும்புக் கம்பி ஒன்றில் உதவியால் ஜன்னல் கண்ணாடி ஒன்றை உடைத்து அந்தப் பெண்ணை மீட்டதாக தெரிவிக்கிறார்.

ஒருவேளை, கார் மோதிய வேகத்தில் காரின் பேட்டரி செயலிழந்திருக்கக்கூடும். அதனால், கதவைத் திறக்க முடியாமல் போயிருக்கும் என தான் சந்தேகிப்பதாக தெரிவிக்கிறார் ரிக்.

விடயம் என்னவென்றால், வழக்கமான பல கார்களைப் போல் இல்லாமல், டெஸ்லா காரின் கதவுகள் எலக்ட்ரானிக் முறையில் செயல்படக் கூடியவையாகும்.

ஆனாலும், டெஸ்லா கார்கள் விபத்துக்குள்ளாகி, அதன் கதவுகள் செயல்படாமல் போகும் நிலையில், கதவைத் திறக்க ஒரு வழி உள்ளதாம்.

அதாவது, கார் கதவில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பேனலைத் திறந்தால், அதில் ஒரு கேபிள் இருக்குமாம். அதைப் பிடித்து இழுத்தால், கார் கதவு திறந்துவிடும்.

ஆனால், இந்த பேனல் குறித்த விவரம் குறித்து அதிகம் விளம்பரம் செய்யப்படுவதில்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், கார் விபத்துக்குள்ளாகும் நிலையில், இப்படி ஒரு பேனலை திறக்கவேண்டும், அதற்குள் இருக்கும் கேபிளைப் பிடித்து இழுக்கவேண்டும் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இருப்பதில்லை.

விபத்தில் சிக்கிய பதற்றத்தில் இருக்கும் யாரும், இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்க முடியாது என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்!