பண்டோரா பேப்பர்ஸ் சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படவுள்ளது
பண்டோரா பேப்பர்ஸ் தகவல் வெளிப்படுத்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலங்கையர் குழுவின் சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படவுள்ளது என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவையான ஆவணங்களை விரைவில் கொண்டு வருவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே பேச்சு நடத்தி வருகின்றது என்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலை தெரிவித்துள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
பண்டோரா அறிக்கையில் பல இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையில் உள்ள அனைத்துத் தகவல்களும் பெறப்பட்டு உரிய முறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் 2021ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.
சட்டவிரோதமாக சொத்துக் குவித்திருந்த அரசியல் தலைவர்கள் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல தரப்பட்ட பிரபலங்களின் விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த ஆவணத்தை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. 117 நாடுகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசனின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.