ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் செலவிடும் நிதியின் அளவைக் கண்காணிப்பதற்கும், இம்முறை தாம் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அவசியமான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்குமென 6 முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஒன்றிணைந்து 'தேர்தல் செலவு மீட்டர்' என்ற பிரசார நிதி அவதானிப்புக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், இத்தேர்தலுக்கு முன்பாக வேட்பாளர்களால் செலவிடப்படும் மொத்த நிதியின் அளவைக் கண்காணிக்கும் நோக்கில் நாட்டின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கஃபே), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம், ஹேஷ்டெக் தலைமுறை மற்றும் ஜனநாயக மறுசீரமைப்பு, தேர்தல் கற்கைகளுக்கான நிலையம் ஆகிய 6 அமைப்புக்கள் ஒன்றிணைந்து 'தேர்தல் செலவு மீட்டர்' என்ற பிரசார நிதி அவதானிப்பு இணைய வழிக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளன.
இப்பிரசார நிதி அவதானிப்புக் கருவியின் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (16) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இது கடந்த 2023ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் திறம்பட நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கும் பங்களிப்புச்செய்யும். அதுமாத்திரமன்றி பொதுமக்கள் அவர்களது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்தல், அவர்கள் வாக்களிப்பது குறித்து சரியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு அவசியமான தகவல்களை வழங்கல், வேட்பாளர்களிடையே சமநிலையான போட்டிக்களத்தை உறுதிப்படுத்தல், ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநாட்டக்கூடிய சுதந்திரமானதும், நியாயமானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான தேர்தல் சூழலை மேம்படுத்தல் என்பனவும் இந்த பிரசார நிதி அவதானிப்புக் கருவியின் இலக்குகளாகும்.
இக் கருவியை www.chandasallimeetare.Ik இணையத்தளத்தின் ஊடாக பொதுமக்களால் பார்வையிட முடியும். அதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் விபரங்கள், அவர்களது தேர்தல் செலவினங்கள் குறித்த விபரங்கள், வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்கள், தேர்தல் விஞ்ஞாபனங்கள் உள்ளிட்ட பரந்த தகவல்கள் உள்ளடங்கியிருக்கும்.
அதேவேளை இக்கருவியை ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களால் நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளில் பதிவாகும் தேர்தல் செலவினங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பார்கள். அத்தகவல்களும் இந்த இணையத்தளத்தின் ஊடாகப் பகிரங்கப்படுத்தப்படும்.
அதேபோன்று பொதுமக்கள் தத்தமது பிரதேசங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் அப்பிரசாரத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவை விட மிகையான நிதியை செலவிடுவதாகக் கருதும் பட்சத்தில், அதுபற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் இந்த இணையத்தளத்தில் உள்ள முறைப்பாட்டுப் பகுதியின் ஊடாகப் பதிவேற்றம் செய்யமுடியும்.
அம்முறைப்பாடுகள் தேர்தல் கண்காணிப்பாளர்களால் ஆராயப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவை பகிரங்கப்படுத்தப்படும். எனவே இக்கருவியின் ஊடாக தேர்தல் பிரச்சார நிதி முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு அளிக்கவும், அதில் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படையில் தாம் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவும் முடியும்.