எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப் படகைப் பயன்படுத்தி பருத்தித்துறை கடலில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் விடுதலை
எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப் படகைப் பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டில் இந்தப் பன்னிரு இந்திய மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது வழக்கை விசாரித்த நீதிவான் கிருசாந்தன் பொன்னுத்துரை எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் கடந்த நவம்பர் 27ம ஆம் திகதி அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.
ஆனாலும் கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் மீனவர்கள் பன்னிருவரும் நேற்று 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றில் நீதிவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்திய மீனவர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து அவர்களை விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
படகு அரசுடமையாக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.