இலங்கையில் அரச அதிகாரிகளின் ஆதரவுடன் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்கின்றன

6 months ago

அரச அதிகாரிகளின் ஆதரவுடன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன என்று அமெரிக்காவின் மதச் சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மதச் சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கையில் பௌத்த மதத்தைப் பின்பற்றாதவர்கள் தங்களின் மத அனுட்டானங்களைக் கடைப்பிடிக்க தீவிரமான சவாலையே எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

பௌத்த கிராமங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் அல்லது மதவழிபாட்டுக்காக பௌத்தசாசன அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என வேண்டுகோள் விடுப்பவர்களுக்கு ஆதரவாக அரச அதிகாரிகள் செயற்பட்டனர்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆராய்ந்தவர்கள் இதை வெளிப்படுத்தியுள்ளனர். 

யாழ். மாவட்டத்தில் தையிட்டி என்ற இடத்தில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு அரசாங்கம், அரச அதிகாரிகள் வழியாகக் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்தது.

குறித்த சட்டவிரோத விகாரையைச் சுற்றியுள்ள பகுதியில் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு 12 ஏக்கர் நிலமிருப்பதாகவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் இராணுவம் அந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்றது முதல் தற்போதுவரை பொலிஸாரின் கண்காணிப்பினையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளதாக முஸ்லிம் அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்களின் குடும்பத்தவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களும் தாங்கள் தொடர்ந்தும் துன்புறுத்தல்களை எதிர் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை விசாரணை செய்கின்றனர்.

அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தினை சிங்கள - பௌத்த சமூகத்தின் மேலாதிக்கத்துக்கான சனத்தொகை ஆபத்தாகக் கருதுகின்றது என சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

அத்துடன், இலங்கையில் அனைத்து மதவழிபாட்டுத் தலங்களையும் பதிவு செய்யவேண்டும் என்ற 2022 ஆம் ஆண்டின் சுற்றுநிருபம் தற்போதைய சட்டத்தின் அடிப்படையிலானது இல்லை.

அரசமைப்புக்கு முரணானது என சிவில் சமூக அமைப்பினரும் சட்டத்தரணிகளும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் இந்தச் சட்டத்தை சிறுபான்மை இனத்தவரின் வழிபாட்டுத் தலங்களை இலக்கு வைப்பதற்குப் பயன்படுத்துகின்றது என்றுள்ளது.

அண்மைய பதிவுகள்