ஹெய்டியின் வடக்கு கடற்பகுதியில் பயணித்த படகு தீப்பிடித்ததில் குறைந்தது 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு.
ஹெய்டியின் வடக்கு கடற்பகுதியில் பயணித்த படகு தீப்பிடித்ததில் குறைந்தது 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், படகில் பயணித்த மேலும் 41 பேர் ஹெய்டி கடலோர காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் படகில் இருந்தவர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி தாங்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த வேளை எரிபொருள் நிரப்பப்பட்ட கொள்கலன்களில் தீ பிடித்து எரிந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் வெளிநாட்டு செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மூலம் சிகிச்சை பெற்று வருவதோடு, 11 பேர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.