இலங்கைக் கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியக் கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி, துணை அட்மிரல் ராஜேஷ் பெண்டார்கரிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, இந்தியக் கடற்படையின் கிழக்கு கடற்படைப் பிரிவு தளபதி சனிக்கிழமை சட்டப் பேரவையிலுள்ள முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இதன்போதே முதல்வர் ரங்கசாமி மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
"காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்படையின் செயற்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்த கல்வியை, விழிப்புணர்வை புதுச்சேரியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கடற்படையினர் மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”- என்றார்.