கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை.

5 months ago


கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாகனங்களை நிறுத்தும் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

ஒரு வலயத்திற்கு ஒரு ஒப்பந்ததாரர் பணியமர்த்தப்படுவார் என அதன் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

“கொழும்பின் மாநகர எல்லைக்குள் வாகன தரிப்பிடத்தை நிர்வகிப்பதற்காக தற்போதுள்ள வீதிகளுக்கு ஒப்பந்ததாரர் மற்றும் நிருவாகி ஒருவரை நியமிக்கும் முறைக்கு பதிலாக, தற்போது குறிப்பிட்ட பிரதேசத்திற்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றோம்.

அனேகமாக 3 மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். அந்த பகுதியில், வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.

ஏனெனில் தற்போது ஒரு வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த காலம் நிறைவடைவதற்குள் மற்றுமொரு இடத்தில் வாகனத்தை நிறுத்தினால் அந்த டிக்கெட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

வலயத்தில் செயல்படுத்தும்போது, ​​அந்தந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியும் என்பதால், சாரதிகளுக்கு நன்மை கிடைக்கும்."

எதிர்காலத்தில் வாகனத் தரிப்பிடங்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டுள்ளார்.