வெளிநாட்டு இலங்கையர்களிடம் தன்னைப் போல காணொளியில் கதைத்து பணம் வசூலிப்பதாக கைத்தொழில் அமைச்சர் தெரிவிப்பு
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம் காணொளி அழைப்புகள் மூலம் பணம் சேகரிக்கும் மோசடியில் தன்னைப் போன்று பாவனை செய்து ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"என் பெயரைப் பயன்படுத்தி என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு நபர் அல்லது குழு பல வெளிநாடுகளில் என் பெயரில் நன்கொடை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக வட்ஸ்சப் குழுக்களைப் பயன்படுத்துகிறார்கள். ஜப்பான், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் எங்களுடன் நட்பாக உள்ளவர்களை அவர்கள் அழைத்துள்ளனர்."
" முதல் சில வினாடிகளுக்கு வீடியோ கோல் எடுக்கிறார்கள். தெளிவில்லாமல்... உடம்பு சரியில்லை என்றும், குரல் தெளிவாக இல்லை என்றும் கூறி அவர்கள் உதவி கேட்கிறார்கள்.
அதற்காக, அவர்கள் பல வங்கிக் கணக்குகளையும் வழங்கியுள்ளனர்."
"இது எங்களுக்குத் கிடைத்த தகவல். இந்த தகவல் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது."
“நாட்டு மக்களிடமும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமும் நாம் கோருவது என்னவென்றால், நானோ, எமது பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ இவ்வாறு அழைத்து பணம் கேட்பதில்லை.
பணம் கேட்டால், பொறுப்பான அமைப்புகள் மூலம்தான் நடக்கும். எனவே இவ்வாறு எந்த வகையிலும் எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்" என்றார்.