டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைத்த ஈழத் தமிழ் புகலிடலாளர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்கும் திட்டத்தை பிரிட்டன் முன்வைப்பு.
டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை பிரிட்டனுக்குள் அனுமதிக்கும் திட்டம் ஒன்றை பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அமெரிக்கா - பிரிட்டன் நாடுகளின் இராணுவ தளமாக உள்ள டியாகோ கார்சியா தீவில் கடந்த 3 வருடங்களாக 60 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளனர்.
இவர்கள் அங்கு புகலிட கோரிக்கையை பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தீவிலிருந்து இலங்கை தமிழ் குடியேற்றவாசிகளை பிரிட்டனுக்குள் அனுமதிக்க பிரிட்டன் அரசாங்கம் முன்னர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கொள்கை மாற்றமொன்றை செய்வதற்கு பிரிட்டன் அரசாங்கம் இணங்கியுள்ளது என்று அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், புகலிட கோரிக்கையாளர்கள் அனைவரையும் நேரடியாக பிரிட்டனுக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும் இதேவேளை, குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகளை எதிர்கொள்ளாத ஆண்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
டியாகோ கார்சியாவில் உள்ள ஈழத் தமிழர்களை தொடர்புகொண்டு பேசியுள்ள பிரிட்டன் அதிகாரியொருவர் தீவில் காணப்படும் வழமைக்கு மாறான சூழ்நிலை காரணமாக அவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டியாகோ கார்சியாவை சென்றடைந்த புலம்பெயர்ந்தோர் விடயத்தில் முன்னைய அரசாங்கத்தால் தீர்க்கப்படாத ஆழமான சிக்கலான சூழ்நிலையை தற்போதைய அரசாங்கம் சுவீகரிக்க நேர்ந்தது என்று பிரிட்டனின் பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.