தெற்கில் நிலவும் சீரற்ற காலநிலை 10 பேர் உயிரிழந்தனர்

7 months ago

தென்னிலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து நேற்று இரவு (01) வரையான காலப்பகுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் காணாமற்போயுள்ளனர்.

அவிசாவளை - புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வீடு வெள்ளத்தில் மூழ்கியதில் இந்த இடர் நேர்ந்துள்ளது.

அதேநேரம் புவக்பிட்டிய - ஹேவாஹின்னவில் மண்சரிவில் சிக்கி 11 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை - தெய்யந்தரவிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர். 20 மற்றும் 27 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.

இரத்தினபுரி எலபாத்தவில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, கிரியெல்லவில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அயகம தும்பரவில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

காலி தவலமவில்ஜின் கங்கை பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கி ஆண்கள் இருவர் காணாமற்போயுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொலவிலிருந்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, பிரதான வீதி, கரையோர வீதி மற்றும் புத்தளம் வீதி என்பனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் தாமதமாகச் செல்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல ரயில் பாதையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

வாக மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி பாதையில் பயணிக்கும் ரயில், வாக ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை - தொடரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டின் சில பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சு அறிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்