பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?
கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது.
ஐரோப்பாவிலேயே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடாக ஹங்கேரி கருதப்படுகிறது. மேலும் விக்டர் ஆர்பானைச் சர்வாதிகாரி என பலரும் வர்ணிக்கின்றனர்.
இந்தச் சூழலில், ஜூலை 8, 9 தேதிகளில் ரஷ்யாவுக்கு இந்தியப் பிரதமர் மோதி மேற்கொள்ளும் பயணத்தை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன?
இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த நாடும் வெளிப்படையாகக் கருத்து கூறவில்லை என்றபோதும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி வியாழக்கிழமை அன்று, ரஷ்யாவைப் போருக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சியில் இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
யுக்ரேன் மீது படையெடுத்து, இன்று ஐரோப்பாவில் பதட்டமான சூழலை உருவாக்கிய நபராகக் கருதப்படும் புதினுடன் மோதி நிற்கும் புகைப்படங்கள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பது மட்டும் நிச்சயம்.
22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டை நடத்துவதற்கான புதினின் அழைப்பை ஏற்று மோதி ரஷ்யாவுக்குச் செல்கிறார் என்கிறது அதிகாரபூர்வ அறிவிப்பு. 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக இரு நாட்டு உறவு ரீதியான சந்திப்புகள் ஏதும் நடைபெறவில்லை.
இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் குறித்து புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய அரசு, இரு நாட்டுத் தலைவர்களும், 'பாரம்பரியமாக நட்பு பாராட்டும் ரஷ்ய-இந்திய நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள்' பற்றி விவாதிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தியா இந்தச் சந்திப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை வெளியிடவில்லை எனினும் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சந்திப்பு மேற்கத்திய நாடுகளைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இரு நாடுகளின் நட்பைத் தாண்டி இந்தச் சந்திப்பில் ஏதேனும் இருக்கிறதா?
தெற்காசிய அரசியல் ஆய்வுகளில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் கிங்க்ஸ் கல்லூரியின் பேராசிரியர் க்றிஸ்டோஃபர் ஜாஃபர்லாட் மோதியின் மாஸ்கோ பயணம் புவிசார் அரசியல் பரிமாணங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
"ஆயுதங்களுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருப்பது மட்டுமின்றி அனைத்து தரப்பு நாடுகளுடன் நட்பைப் பேணுவதில் இந்தியா ஆர்வம் காட்டுவதால் ரஷ்யாவுடனான தொடர்பை இந்தியா தொடர விரும்புகிறது," என்று குறிப்பிடுகிறார் ஜாஃபர்லாட்.
சீனாவுடன் ரஷ்யா காட்டும் நெருக்கமும் இந்தப் பயணத்திற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
"மாஸ்கோவுடனான உறவை இந்தியா நல்ல முறையில் வைத்துக் கொள்ளும் பட்சத்தில், சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவுக்குச் சவால் விடலாம்," என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.
மோதி கடைசியாக மாஸ்கோவுக்கு 2015-ஆம் ஆண்டு தான் பயணித்தார். பிறகு 2019-இல் ரஷ்யா சென்ற அவர் விளாதிவோஸ்தோக்கில் நடைபெற்ற பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்றார். புதின் டெல்லிக்கு 2021-ஆம் ஆண்டு வருகை புரிந்த நிலையில், 2022-ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற எஸ்.சி.ஒ. மாநாட்டில் மோதியும், புதினும் சந்தித்துக் கொண்டனர்.
அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய உறவு நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. மேலும், உலகளவில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த இந்நாடுகள் முயற்சி செய்து வருகின்ற சூழலில், மோதி மாஸ்கோவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஏற்கனவே இந்நாடுகள் ரஷ்யாவுடனான அதிகாரபூர்வச் சந்திப்புகளைக் கணிசமாக குறைத்துள்ளன.
மோடியின் இந்தப் பயணத்தை இந்தியா, 'தன்னிச்சையான, தேசிய நலன்களைக் கருத்தில் கொண்ட வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலான சந்திப்பு' என வர்ணிக்கிறது. ஆனால், ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் ரஷ்யாவுக்கு எதிரான போக்கு நிலவி வருகின்ற சூழலில், மோதியின் மாஸ்கோ பயணம், இந்தியாவின் கூட்டாளியான அமெரிக்காவுக்குக் கோபத்தை ஏற்படுத்துமா?
அமெரிக்காவின் பால்டிமோரில் அமைந்திருக்கும் 'தி ஜான்ஸ் ஹாப்கின்ஸ்' பல்கலைக்கழகத்தில் அப்ளைட் எக்கானமிக்ஸ் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஸ்டீவ் எச். ஹாங்கே, இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு வரலாற்று ரீதியானது என்று குறிப்பிடுகிறார். ஸ்டீவ், அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் பொருளாதார ஆலோசகர் குழுவில் பணியாற்றியவர்.
"சோவியத் காலத்தில் இருந்தே நல்ல நட்புடன் விளங்கும் ரஷ்யா உட்பட, இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்ல உறவைத் தொடர விரும்புகிறது என்பது மோதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் வெளியிட்ட அறிக்கையில் வெளிச்சமாகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
1960களில் இருந்து 1980கள் வரை இந்தியாவில் வளர்ந்த யாரும் சோவியத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்திருக்க முடியாது.
இந்தியாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலைகளை சோவியத் தான் துவங்கியது. இந்தியாவின் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு உதவியது சோவியத் ஒன்றியம். இந்தியா நெருக்கடிகளைச் சந்தித்த காலத்தில் சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் துணை நின்றது.
1965-ஆம் ஆண்டு, தாஷ்கெண்டில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மத்தியஸ்தராகச் செயல்பட்டது சோவியத் ஒன்றியம். நீங்கள் ரஷ்யாவுக்குச் சென்றால், அங்கு பாலிவுட் நடிகர் ராஜ் கபூரைப் பற்றி மக்கள் பேசுவதைக் கேட்க முடியும்.
2000-களில் புதின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட போது, இரு நாட்டினரும், ‘டிக்ளரஷன் ஆஃப் ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப்’ என்ற பெயரின் கீழ் பாதுகாப்பு, விண்வெளி, மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒப்பந்தமிட்டனர். S-400 ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம், எரிசக்தி தொடர்பான திட்டங்கள் இவ்விரு நாட்டின் உறவுகளுக்கானச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.
மாறிவரும் உலக அரசியலுக்கு மத்தியில் இவ்விரு நாடுகளும் தங்களின் நட்பை ஆழப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சிகளையே இவை சுட்டிக்காட்டுகின்றன.
வலதுசாரிக் கருத்தியலாளரான முனைவர் சுவ்ரோகமல் தத்தா இது குறித்துப் பேசுகையில், இரு நாட்டு உறவும் தற்போது உச்சத்தில் உள்ளது என்கிறார். மோதியின் பயணம், மாறிவரும் புவிசார் அரசியல் தளத்தில் மாற்றங்களையும், புதிய உறவுகளையும் கொண்டுவரும் என்கிறார்.
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் சட்டத்திற்குப் புறம்பான 'சட்டத்திற்குப் புறம்பான போரை' எதிர்த்து வலுவான ஜனநாயக நாடான இந்தியா கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை என்று மேற்கு உலகினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் 'நடுநிலைத்தன்மை' ரஷ்யாவின் 'சார்பு நிலையாகப்' பலமுறை புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், ரஷ்யா குறித்த விவகாரங்களில் மேற்கத்திய ஊடகங்கள் நடுநிலைத் தன்மையை இழந்துவிடுவதாக இந்தியா கருகிறது.
"எந்தச் சூழலிலும் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கும் என்ற மேற்கத்திய நாடுகளின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்லை. இந்தியாவுக்கு அதன் தேச நலன் மட்டுமே முக்கியமானது," என்கிறார் முனைவர் தத்தா.
இருப்பினும், இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்தும், யுக்ரேன் மீதான போரை இந்தியா கண்டிக்கவில்லை என்பது குறித்தும் மேற்கத்திய நாடுகள் கவலை கொண்டுள்ளன.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவை ஓரங்கட்டும் முயற்சிகளைச் சிக்கலாக்குவதாகக் கருதுகின்றனர்.
இந்தியா ரஷ்யாவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டுவது, வர்த்தகம் மற்றும் ராணுவ ரீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, ரஷ்யாவின் யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்தும் வகையில் சர்வதேச அளவில் அழுத்தம் தருவதற்கான பிரசாரங்களை குறைத்து மதிப்பிடுவது, போன்றவை மேற்கத்திய நாடுகளைக் கவலையடைய வைத்துள்ளது.
இந்தியா ரஷ்யாவில் இருந்து அதிக அளவு எரிசக்தியை இறக்குமதி செய்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை இந்தியா மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
இது ஒரு சிக்கலான விவகாரம் என்பது இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். மூலோபய நலன் மற்றும் எரிசக்திப் பாதுகாப்புக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கத் தன்னுடைய திறனை நம்பியுள்ள அதே வேளையில், இந்தியா பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது.
2022-ஆம் ஆண்டு யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கிய பின், இந்தியா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த கச்சாப்பொருட்களின் மதிப்பானது 13% அதிகரித்துள்ளது என்று, கச்சாப்பொருட்கள் இறக்குமதி தொடர்பாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் CREA (Centre for Research on Energy and Clean Air) வெளியிட்ட மதிப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக 2023-2024-ஆம் ஆண்டுகளில் இந்தியா ரஷ்யா இடையேயான வர்த்தகம் சுமார் 5.3 லட்சம் கோடி இந்திய ரூபாயாக (64 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரித்துள்ளது. ஆனால், இதில் இந்தியாவின் பங்கானது வெறும் 33,400 கோடி இந்திய ரூபாய் (4 பில்லியன் டாலர்கள்) தான். யுக்ரேன் மீதான போருக்குப் பின், ரஷ்யா
இந்தியாவின் பங்கானது வெறும் 33,400 கோடி இந்திய ரூபாய் (4 பில்லியன் டாலர்கள்) தான். யுக்ரேன் மீதான போருக்குப் பின், ரஷ்யா தற்போது பணக்கார நாடாக மாறியுள்ளது. அந்நாட்டின் கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்த சீனாவும் இந்தியாவும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் பரவலாகச் செய்தி வெளியிட்டுள்ளன.
யுக்ரேன் மீதான போருக்குத் தேவையான நிதியைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேற்கத்திய நாடுகள் விதித்தப் பொருளாதாரத் தடை பயனளிக்கவில்லையா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில் நடந்த ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கு வலுவான மறுப்பைப் பதிவு செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பொருளாதாரத் தடை இருந்த போதும், இந்தியாவைக் காட்டிலும், மேற்கத்திய நாடுகள் தான் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளன என்று குறிப்பிட்டார்.
"நீங்கள் ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதியைப் பற்றிப் பேச வேண்டுமெனில், முதலில் ஐரோப்பிய நாடுகளைக் கவனியுங்கள். எரிசக்தி பாதுகாப்பின் தேவையைக் கருதி நாங்கள் எரிசக்தி இறக்குமதி செய்கிறோம். ஆனால், ஐரோப்பிய நாடுகள் ஒருநாள் மதியம் இறக்குமதி செய்யும் கச்சாப் பொருட்களின் மதிப்பு, இந்திய இறக்குமதிகளின் ஒரு மாத இறக்குமதி மதிப்பைவிட அதிகம். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத் தடை பயனளிக்காது என்று கருதும் எண்ணற்ற அமெரிக்க நிபுணர்களில் பேராசிரியர் ஸ்டீவும் ஒருவர். "பொருளாதாரத் தடை, வர்த்தகத்தில் இடையூறு போன்றவற்றை நான் எதிர்த்தேன். கொள்கை மற்றும் நடைமுறையில் எந்த இலக்கைக் கருத்தில் கொண்டு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதோ, அந்த இலக்கு அடையப்படவில்லை. எனவே, இந்தியாவின் கருத்து தான் என்னுடைய கருத்து,"," என்கிறார்.
பேராசிரியர் ஜாஃபர்லாட் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்.
"மேற்கிலுள்ள பலரும் வேறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். பொருளாதாரத் தடைகள் செயல்படாததற்குக் காரணம், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான். குறிப்பாக, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவியாக இருந்தன. இந்த நடைமுறை சர்ச்சைக்குரிய ஒன்றா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்," என்கிறார்.
தற்போது சாத்தியமானதாகத் தோன்றும் ஒரு அரசியல் நிகழ்வு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்
தற்போது சாத்தியமானதாகத் தோன்றும் ஒரு அரசியல் நிகழ்வு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது. அது நடந்தால் என்ன நடக்கும்?
ப்ரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்தியாவை எச்சரிக்கிறார். "அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்துமே மாறும். யுக்ரேன் மீதான ரஷ்யப் போர் முதல் அனைத்தில் இருந்தும் புதின் தப்பித்துவிடுவார். ஆனால், இந்தியாவுக்கு என்ன கிடைக்கும்? இமயமலை பிராந்திய ஒருமைப்பாட்டு விவகாரத்தில், இந்தியாவுக்குப் பாதகமான முடிவை சீனா எடுக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014-ஆம் ஆண்டு க்ரைமியாவைத் தன்னோடு இணைத்துக்கொண்டது, யுக்ரேன் மீது போர் தொடுத்தது, போன்ற நடவடிக்கைகளால் சர்வதேச அளவில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளால், ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் அதன் கூட்டணி நாடுகள் பொருளாதாரத் தடை மற்றும் அரசியல்சார் பின்னடைவுகளை ஏற்படுத்த வகை செய்தது. ஆனால் சீனா, இந்தியா, மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை எப்போதும் போல் வலுவாகப் பேணி வந்தது ரஷ்யா. இது மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளின் தாக்கங்களை குறைக்க உதவியது.
மோதி உள்ளிட்ட தலைவர்கள் ரஷ்யாவின் தலைநகருக்குச் செல்வது ரஷ்யா, அல்லது புதின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் இல்லை என்கிறார் பேராசிரியர் ஸ்டீவ். "மோதியும் புதினும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது நல்லது. அரசியல் உறவுகள் இப்படித்தான் நடைபெறும்," என்று அவர் கூறினார்
பேராசிரியர் ஜாஃபர்லாட், புதின் சர்வாதிகார அரசுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். "சர்வாதிகார ஆட்சியாளர்களிடம் இருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை. மாஸ்கோ, ஆப்பிரிக்க சர்வாதிகார நாடுகள், சீனா, இரான் போன்ற நாடுகளுடன் நெருங்கிய உறவில் நீடிப்பது இதற்கு ஒரு உதாரணம். ஹங்கேரி மட்டும் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து மாஸ்கோவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நாடு. அந்த ஒன்றியத்தில் சுதந்திரமற்ற நாடு அது. ஆனால் இந்தியா?" என்றும் கேள்வி எழுப்பினார் அவர்.
"ஜனநாயகத்தை நிராகரிப்பது போன்றசெயல்பாடுகளில் ஒருமித்த தொடர்புகளைக் கொண்டிருப்பதால் கூட இந்தியா ரஷ்யாவுடனான உறவை நீட்டிக்கலாம். மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உலகத்தின் தெற்கிலிருக்கும் நாடுகளின் தலைவராகவும், அதன் ஆதிக்கத்தை நிரூபிக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சியாகவும் இது இருக்கலாம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, ஹங்கேரி, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தகளை ஏற்படுத்திக் கொள்வது அமெரிக்கா விதித்த பொருளாதார ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று பலரும் நம்புகின்றனர். மேலும் இந்நாடுகளின் ஒத்துழைப்பு யுக்ரேனில் போரை நீட்டிப்பதோடு, உலக அதிகார மட்டங்களை மாற்றியமைக்கிறது.
மோதியின் ரஷ்யப் பயணம் புதினுக்குப் பெரு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.
நன்றி- BBC