இலங்கையானது 0.782 என்ற மனித அபிவிருத்திச் சுட்டெணுடன் 193 நாடுகளின் பட்டியலில் 78 ஆவது இடத்தில் இருக்கின்றது.
சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையானது 0.782 என்ற மனித அபிவிருத்திச் சுட்டெணுடன் 193 நாடுகளின் பட்டியலில் 78 ஆவது இடத்தில் இருக்கின்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை உயர் - நடுத்தர வருமானம் பெறும் நாடு எனும் நிலையை அடைந்திருந்த போதிலும், 2020 ஆம் ஆண்டு மீண்டும் குறைந்த நடுத்தர வருமானம் பெறும் நாடு எனும் நிலைக்குக் கீழிறங்கியது. இருப்பினும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண் பிரகாரம் 193 நாடுகளில் இலங்கை 78 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இலங்கை உயர்வான மனித அபிவிருத்தியைக் கொண்டிருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும்.
'உயர் பணவீக்கம், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, உணவுப் பாதுகாப்பின்மை, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உள்ளடங்கலாக தீவிர பொருளாதார தட்டுப்பாடு நெருக்கடியின் தாக்கங்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது. அவ்வேளையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சேதன உரக்கொள்கையின் தோல்வியை அடுத்து நெருக்கடி மேலும் தீவிரமடைந்ததுடன், உள்நாட்டு விவசாய உற்பத்தி கணிசமான அளவினால் வீழ்ச்சியடைந்தது' என சர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை 2022 இல் எழுச்சியுற்ற மக்கள் போராட்டம் பின்னர் தணிந்த போதிலும், மின்கட்டண உயர்வு மற்றும் வரி அதிகரிப்பு போன்ற காரணங்களுக்காக 2023 ஆம் ஆண்டிலும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், அக்காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களைத் தவிர பணவீக்கம் மற்றும் வெளிநாட்டுக்கடன் என்பன மிகவும் உயர்வான மட்டத்தில் காணப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.