சிவில் சமூக பிரதிநிதிகளின் கருத்துக்கள் பயனற்றுப்போகிறதா?

சிவில் சமூகப் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்படும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் பயனற்றுப் போவதாகத் தான் எண்ணத்தோன்றுகிறது. அரசியல் தீர்வு விடயத்திலோ, ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் விடயத்திலோ அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நடந்து முடிந்த போரின் பின்னர் தமக்கு எதுவுமே கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்களை ஒரு அணியில் ஒன்று சேர்ப்பதாக இருந்தால் அரசியல்தீர்வு விடயங்களில் முன்னேற்ற கரமான சூழலை தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் ஏற்படுத்த வேண்டும், தீர்வு தொடர்பில் பின்னடைவான சூழல் நிலவும் பட்சத்தில் தமிழ் மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் வேறாகப் போகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான பொது கட்டமைப்பை உருவாக்குவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுடன் சிவில் சமூகத் தூதுக் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை(05) சந்திப்பை மேற்கொண்டுள்ளது.

சிவில் சமூகங்களின் தூதுக்குழுவின் சார்பில் அரசறிவியல் விரிவுரையாளர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யதீந்திரா, அ.யோதிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட வேண்டும் என வவுனியாவில் இடம்பெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளின் தூதுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சந்திப்பில் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனித் தனியாகச் சந்தித்து கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்துக்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு மக்களிடமும் செல்ல வேண்டும் என்று நலன்விரும்பிகள் கேட்டு நிற்கின்றனர். சிவில் சமூகம் ஊடாக மக்களின் கருத்துக் கணிப்பை பெற முடியும். சிவில் சமூகம் மக்களோடு நிற்பதால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்.இல்லாது போனால் சிவில் சமூகம் இருந்தும் என்ன பயன் கிடைக்கப் போகிறது என்றுதான் சிந்திக்கத் தோன்றுகிறது.

இதற்கிடையில் சீனத் துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழு ஐனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை நேரடியாகக் கண்டறியும் நோக்கில் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இலங்கையின் அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பன தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள சீன இராஜதந்திர மையம் ஆய்வு அறிக்கைகளை பெய்ஜிங்குக்கு அனுப்பியிருந்தது.

இவற்றை முழுமையாக அவதானத்துக்கு எடுத்துக் கொண்ட பின்னரே சீனத் துணை அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான குழுவினர் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஏற்கனவே அனுப்பியிருந்த தகவல்களை நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ள தீர்மானித்திருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதனைக் கண்டறிய மக்களை நேரடியாகச் சந்தித்து கருத்துக் கணிப்பொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இப்படியாக இலங்கை தொடர்பில் சர்வதேச நாடுகளும் மூக்கை நுழைத்துள்ளனர். ஒன்றை மட்டும் தெளிவாக எல்லோரும் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் கருத்துக் கணிப்புதான் தேவையாக இருப்பதாக எல்லோரும் நம்பத் தொடங்கிவிட்டனர்.

மக்கள் கருத்து தான் தங்களுடைய கருத்துவென சொல்லித் திரியும் அரசியல்வாதிகளுக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இனிவரும் காரங்கள் சவாலாக அமையவுள்ளன என்பது உண்மை.


அண்மைய பதிவுகள்