சவேந்திர சில்வாவின் பதவியைப் பறிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு திட்டம் என்று கொழும்பு ஊடகம் செய்தி

2 weeks ago



பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வதனூடாக சவேந்திர சில்வாவின் பதவியைப் பறிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடமையாற்றுகின்றார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், பாதுகாப்புப் படைகளின் பிரதானி அலுவலகத்தை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா, இறுதிப் போர் இடம்பெற்ற போது வன்னிக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டிருந்தார்.

இறுதிப் போரில் நடந்த மனித குலத்துக்கு ஒவ்வாத குற்றச் செயல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர் என்ற அடிப்படையில் அமெரிக்கா சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பயணத் தடை விதித்துள்ளது.