தேரர் ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள சிம் அட்டையை இரு இளைஞர்கள் திருடி தேரரின் வங்கி கணக்கில் இருந்து ஆறரை இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தனர்.
பதுளையிலுள்ள விகாரை ஒன்றிற்கு தொலைபேசி நிறுவனமொன்றின் பணியாளர்கள் என கூறிக் கொண்டு வருகை தந்த இரு இளைஞர்கள் தேரர் ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள சிம் அட்டையை திருடி தேரரின் வங்கி கணக்கில் இருந்து ஆறரை இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
தேரரின் கைத்தொலைபேசிக்கு அண்மையில் வங்கியொன்றின் பெயரில் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் வங்கி கணக்கு தொடர்பான உயர்த்தப்பட்ட வற் கட்டணத்தை குறைக்க அரசு உத்தரவு வழங்கியுள்ளதால், வங்கி கணக்குகளின் விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளனர். அப்போது தேரர் தனது வங்கி கணக்குகளின் விவரங்களை அவர்களிடம் வழங்கியுள்ளார்.
பின்னர், சில நாட்கள் கழித்து விகாரைக்கு வந்த இனந்தெரியாத இரு இளைஞர்கள் கைத்தொலைபேசியில் ஏதேனும் பிரச்சனையா என்று தேரரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது தொலைபேசியில் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் வித்தியாசமான சத்தம் கேட்கிறது என கூறி அந்த இளைஞர்களிடம் தேரர் தொலைபேசியை கொடுத்துள்ளார்.
அதற்கமைய தொலைபேசியை சரி செய்து கொண்டிருந்த இரு இளைஞர்களும் தங்களது தொலைபேசி நிறுவனத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்ப வேண்டும் என கூறி தொலைபேசியை பெற்று பின்னர் தேரரிடம் அதை மீள கொடுத்து விட்டு விகாரையை விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து குறித்த தேரர் அழைப்பொன்றை எடுக்க முயன்றபோது, தொலைபேசி வேலை செய்யாததால் சோதனையிட்டு பார்த்த போது, சிம் அட்டை இல்லாததை அவதானித்துள்ளார்.
சந்தேக நபர்கள் தனது சிம் அட்டையை மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என சந்தேகித்த தேரர் தனது வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அவரது வங்கி கணக்கில் இருந்து அண்மையில் ஆறரை இலட்சம் ரூபா பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, குறித்த தேரர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
திருடப்பட்ட சிம் அட்டை மற்றும் வங்கி கணக்கின் விபரங்களை பயன்படுத்தி இந்த பணத்தை எடுத்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேரர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் சத்திரசிகிச்சைக்காக இந்தப் பணத்தை சேமித்து வைத்திருந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.