ஐந்து வருட அபிவிருத்தித் திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

1 month ago






மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள், மாவட்டத்தின் தேவைப்பாடுகள் உட் பட அனைத்து விடயங்களும் அடங்கிய ஐந்து ஆண்டு திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளீதரன் தலைமையில் நடைபெற்றது.

அனைத்துத் திணைக்களங்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையின் கீழ்                            யு. என்.டி.பியின் நிதியுதவியுடன் இந்த ஐந்து வருட திட்டம்      உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து திட்டங்களை உள்ளடக்கியதாக ஐந்து வருட  திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

விவசாயம், கால்நடை, மீன் பிடி உட்பட உற்பத்தி துறை சார்ந்த திட்டங்களை உள்ளடக்கியதாகவும் நீர்ப்பாசனம், வீதிப் புனரமைப்பு உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதான உட் கட்டுமான திட்டங்கள், சேவைத் துறைகள் உட்பட பல்வேறு துறைகளின் பிரச்னைகள் ஆராயப்பட்டு அந்த பிரச்னைகளுக்கான தீர்வுகளாக பல்வேறு விடயங்கள் இந்த ஐந்தாண்டு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் காணப்படும் வளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான முதலீடுகளைப் பெற்று தொழில்துறைகளை முன்னேற்றும் நிலைக்கு கொண்டு சென்று ஏற்றுமதித் துறையை மேம்படுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் இதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந்த், காணிப் பிரிவுக்குரிய மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், யு. என். டி. பி. மாவட்ட திட்டப் பணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தின் அனைத்துத் துறைகளும் ஆய்வு செய்யப்பட்டு இந்தத் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல், வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளல் ஊடாக செயல்படுத்துவதற்கும் அதனை ஆறு மாதகாலத்துக்கு ஒருமுறை ஆய்வுசெய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


அண்மைய பதிவுகள்