வயநாடு நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

5 months ago


வயநாடு: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் முண்டக்கை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முண்டக்கை பகுதியில் செயல்பட்டு வந்த ஹாரிசன்ஸ் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்ட நிறுவனத்தில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 65 குடும்பங்கள் தேயிலைத் தோட்டத்தை ஒட்டிய ஓடை அருகே உள்ள லைன் வீடுகளில் வசித்துவந்தனர். அந்த வீடுகளில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்களே. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இந்த லைன் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்கியிருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

முண்டக்கை பகுதியை இணைக்கும் பாலம் உடைந்துள்ளதால் அரசு அதிகாரிகளும், தேயிலை தோட்ட நிறுவன அதிகாரிகளும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். "65 குடும்பங்கள் வசித்துவந்த நான்கு லைன் வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது.

குடியிருப்பையொட்டி வெறும் 8 மீட்டர் ஓடை இருந்தது. நிலச்சரிவுக்கு பின் இந்த ஓடை பெரிய ஆறு போல் காட்சியளிக்கிறது. குடியிருப்பில் வசித்து வந்தவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. பாலம் உடைந்துள்ளதால் அதிகாரிகள் யாரும் இங்கு வரமுடியவில்லை. பயமாக உள்ளது" என்று ஷாஜி கூறியுள்ளார்.

பலி எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு: இதற்கிடையே, வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், 100 பேருக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகளுடன் ராணுவம், கடற்படை இணைந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. அதேபோல் சூரல்மலா பகுதியில் பலரது நிலை என்னவானது என்று தெரியாத சூழலே நிலவுகிறது.

வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 84 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.




அண்மைய பதிவுகள்