மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில துப்பாகி ரவையுடன் இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில 84-எஸ் ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் இன்று (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையில் இந்த துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்.
சில வருடங்களுக்கு முன்னர் வீதியில் கிடந்த போதே இந்த ரவையை எடுத்ததாக கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழிலாளர் என்றும், அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.