ஜனாதிபதி வேட்பாளர்களுள் எவர் சிறப்பாக இனவாத கோட்பாட்டினை முன்னெடுத்துச் செல்வார் என சிங்கள தேசம் தெரிவு செய்யும் தேர்தலே ஆகும் என்று வேலன் சுவாமி தெரிவிப்பு.

3 months ago


ஜனாதிபதி வேட்பாளர்களுள் எவர் சிறப்பாக இனவாத கோட்பாட்டினை முன்னெடுத்துச் செல்வார் என சிங்கள தேசம் தெரிவு செய்யும் தேர்தலே ஆகும்.

பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்க்கப்படாத இனப்பிரச்சினையே முக்கிய காரணம் என்பது கூட இன்று மறைக்கவும் மறக்கவும் படுகின்றது. என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்

சிறிலங்காவின் 9வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு பற்றிய ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது

இம்மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலானது தமிழர் தேசத்திக்குரிய தேர்தல் அன்று. அது சிங்கள பேரினவாதம் தமது நாட்டிக்குரிய தமது அதிபரை தேர்வு செய்யும் தேர்தலாகும்.

தற்போது போட்டியிடும் வேட்பாளர்களுள் எவர் சிறப்பாக இனவாத கோட்பாட்டினை முன்னெடுத்துச் செல்வார் என சிங்கள தேசம் தெரிவு செய்யும் தேர்தலே ஆகும்.

இந்த தேர்தலில் தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் எவ்விதத்திலும் கணக்கில் கொள்ளப்படப் போவதில்லை.

சிறிலங்கா தேசத்தில் முதல் ஜனாதிபதியாகிய  ஜே.ஆர் ஜெயவர்த்தன முதல் தற்போது மக்கள் ஆணையின்றி பின்கதவால் ஜனாதிபதியாகிய அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்க வரை அனைத்து சிறிலங்காவின் ஜனாதிபதிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதிலும், எமது நிலங்களை ஆக்கிரமிப்பதிலும், எமது சமய கலாசார விழுமியங்களை சீரழிப்பதிலும், எமது வளங்களை அந்நியர்களுக்கு தாரை வார்ப்பதிலுமே கூடிய கவனம் செலுத்தினர்.

அதேவேளையில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியலில் எவ்விதமான நன்மைகளையும் இத்தேர்தல் வழங்கப் போவதில்லை.

இதுவரை நடந்த தேர்தல்களில் இத்தேர்தலே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையை முற்றாக புறந்தள்ளி சிங்கள தேசத்தின் பொருளாதார பிரச்சனையை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றது.

சிறிலங்காவின் படுபாதகமான பொருளாதார வீழ்ச்சிக்கு தீர்க்கப்படாத இனப்பிரச்சனையே முக்கிய காரணம் என்பது கூட வசதியாக இன்று மறைக்கவும் மறக்கவும் படுகின்றது.       

ஆயினும் இந்த தேர்தலானது தமிழர் தேசம் மீது இன்று திணிக்கப்பட்டுள்ளது. தமிழர் மீது திடீர் பாசம் கொண்ட சிங்கள வேடதாரிகள் எமது தேசம் எங்கும் இன்முகத்துடன் வலம்வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

இதில் தமிழராகிய நாம் எந்த சிங்கள வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க முடியாது. தமிழ் பொதுவேட்பாளருக்கு மட்டும் சங்கு சின்னத்திற்கு வாக்கு அளிப்பதன் மூலம் தமிழர் தேசம் என்றுமே சிங்கள ஆட்சி அதிகாரத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியினை வெளி உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

இரண்டாம் விருப்பு வாக்கு என்ற விடயத்தை தமிழர்கள் முற்றாக புறந்தள்ள வேண்டும்.

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எவ்வித வாக்குறுதிகளையோ அல்லது கரிசனைகளையோ வெளிப்படுத்தாத சிங்கள வேட்பாளர்களை ஆதரிக்க துடிக்கும் எந்த தமிழர் தரப்பையும், குறிப்பாக போலி தமிழ் தேசியத்தை நுனிநாக்கில் பேசிக்கொண்டு சிங்கள பேரினவாதத்திற்கு சேவகம் செய்யும் அனைவரையும் தமிழ் மக்கள் எமது அரசியல் வெளியிலிருந்து முற்றாக அகற்ற வேண்டும்.

நாம் பலமாக இருந்த காலத்திலேயே சர்வதேச முன்னிலையில் சிங்கள தேசத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்வுகளின்றி கபடத்தனமாக முடக்கப்பட்டன.

எமது வரலாற்று பாடத்தினூடாக இலங்கை தீவுக்கான புதிய அரசியல் யாப்பினூடாகவோ, பேச்சுவார்த்தைகள் ஊடாகவோ அல்லது உள்ளூர் பொறிமுறைகள் ஊடாகவோ தமிழ் மக்களின் பிரச்சனை நீதியான முறையில் தீர்க்கப்படாது.

தமிழ் மக்களின் தேசிய கேள்விக்கு தமிழ் மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் ஒரு சர்வசன வாக்கெடுப்பினூடாகவேதான் ஓர் நிரந்தர அரசியல் தீர்வினை அடைய முடியும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம்.

நிரந்தரமான தமிழர் தேசம் இந்த பூமிப்பந்தில் உதிக்க தொடர்ந்தும் பாடுபடுவோம் என உறுதி எடுத்துக்கொள்வோம்.என்றார்.