கண்முன்னே ஜூன் 1 இல் நடந்த ஒரு வரலாற்றுத் துயரைத் தந்த படம்

7 months ago

எங்கள் கண்முன்னே ஜூன் முதலாம் திகதி நடந்த ஒரு வரலாற்றுத் துயரைக் கூட, மே 31 எனச் சிலர் கட்டமைப்பதிலும் ஓர் அரசியல் மறைந்தே இருக்கிறது. 

அதுதொடர்பாக நாம் விழிப்பாக இருப்பதோடு, மீளநிகழாமையையும் உறுதிப்படுத்த வேண்டும் - இவ்வாறு தெரிவித்தார் யாழ்.நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படத்தின் இயக்குநரான எஸ்.சோமீதரன்.

 'எரியும் நினைவுகள்' ஆவணப்படத் திரையிடலும், கலந்துரையாட லும் கடந்த புதன்கிழமை யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், இயக்குநர் சோமீதரன் உரையாற்றும் போது;

யாழ்ப்பாண நூலக எரிப்புக் குறித்து நான் இயக்கிய 'எரியும் நினைவுகள்' ஆவணப் படத்தை யாழ். நூலகத்தில் திரையிடுவதே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது.

17 வருட முயற்சிக்குப் பின்னர் தான் அது சாத்தியமானது. 2007 இல் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருந்தேன்.

திடீரென நாட்டில் நிலவிய சமாதானச் சூழல் குழம்பியதால், இந்த ஆவணப்படத்துக்கு நேர்காணல் தருவதாகச் சொன்ன பலர் பின்னடித்தனர்.

அதையும் தாண்டி நேர்காணல் தந்த ஒருசிலரை நான் ஒளிப்பதிவு செய்தபோது, அவர்கள் இராணுவத்தால் மிரட்டப்பட்டனர்.

இவ்வாறெல்லாம் பலவித இடையூறுகளையும் தாண்டி, உருவான இந்தப் படத்தை யாழ். நூலகத்தில் திரையிட வேண்டுமென்பதே என் கனவாக இருந்தது. 

ஆனால், அதற்கும் பல தடைகள் போடப்பட்டன.

சர்வதேச ரீதியில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு, பல விருதுகளை வென்று, நூற்றுக்கணக்கான திரையிடல்களை 'எரியும் நினைவு கள்' ஆவணப்படம் சந்தித்த பின்னர் தான், அதாவது படம் உருவாக்கப்பட்டு 17 ஆண்டுகளின் பின்னரே என் கனவு நனவாகி, யாழ்.நூலகத்தில் அதனைத் திரையிடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஆனால் அது கூட, அரசியல் பேசக்கூடாது என்ற நிபந்தனையோடுதான்.

நான் வாங்கிய விருதுகளை விடவும் யாழ். நூலகத்தில் இந்த ஆவணப்படத்தை திரையிடும் நிகழ்வுதான் என்னை நெகிழச் செய்கிறது.

யாழ். நூலக எரிப்புப்போல இனியொரு துயரம் மீளநிகழக்கூடாது என்ற நோக்கோடுதான் இந்த ஆவணப்படத்தை நான் உருவாக்கினேன்.

மீளநிகழாமை என்பதற்குள் எல்லாமே அடங்குகின்றன . 'போரைத் தொடங்குவதற்கான விதை எங்கு போடப்பட்டது என்பதற்கு காண்பிய சாட்சி யாழ். நூலகம் தான்.

அதனை எம் இளையோரிடம் பரவலடையச் செய்யவேண்டும்.

இன்னொரு விடயம் இங்கு முக்கியமானது. நூலகம் எப்போது எரிக்கப்பட்டது என்ற குழப்பமே அது.

சிலர் 1981 மே 31 ஆம் திகதி இரவு எரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது தவறு. 1981 ஜூன் முதலாம் திகதியே நூலகம் எரிக்கப்பட்டது.

மாவட்ட சபைத் தேர்தல் வேளையில் மே 31 ஆம் திகதி, தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள கடைகள், கட்டடங்கள் என்பன தீக்கிரையாக்கப்பட்டன.

அதன் பின்னரே, அடுத்தநாளே நூலகத்தை அவர்கள் திட்டமிட்டு எரித்தார்கள்.

அண்மைய பதிவுகள்