யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - மாவட்ட பதில் அதிபர் ம.பிரதீபன் தெரிவிப்பு.

3 months ago


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருத லிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 வாக்காளர்களும். கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 93ஆயிரத்து 187 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்கெடுப்பு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்கெடுப்பு நிலையங்களும் என மொத்தம் 619 வாக்கெடுப்பு நிலையங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் மேலும் தெரிவிக்கையில்,

"வாக்களிப்பு நிலையத்தில்          செப்டெம்பர் 21 ஆம் திகதி காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 4 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் வாக்களிப்பு                      நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது.

தெல்லிப்பழையைச் சொந்த இடமாகக் கொண்டு பருத்தித்துறையில் தற்காலிகமாக வசித்து வருகின்றவர்களை       வியாபாரி மூலையிலிருந்து தெல்லிப்பழையில் வாக்களிப்பதற்குப் போக்குவரத்து பஸ்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைக்காக 8 ஆயிரத்து 232 உத்தியோகத்தர்களும். 2 ஆயி ரத்து 100 பொலிஸாரும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் 42 பஸ்களும், தனியார் போக்குவரத்துச் சங்கம் மூலம் 132 பஸ்களும் தேர்தல் கடமைகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

சிரேஷ்ட தலைமை தாங்கும்      அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு இதர ஆவணங்கள் விநியோகித்தல் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலாவது பஸ் காலை 8.30 மணியளவில் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்லவும் எடுத்து வரவும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் ஹெலி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குக் கொண்டு வரப்படும்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பெறுபேற்றைத் தயாரித்து வெளியிடும் நிலையம் அமைக்கப்படும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 511 வாக்க ளிப்பு நிலையங்களினதும் வாக்குகளை எண்ணுவதற்காக 41 வாக்கெண்ணும் நிலையங்களும், அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக 14 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மத்திய கல்லூரியில் 55 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.” - என்றார்.