தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவின் அறிக்கை 17.05.2024

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்தும் நோக்கத்தோடு ஒன்றிணைந்த தமிழ் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு, மே 18 இல் எல்லாத் தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றது.

பௌதீக ரீதியாக முள்ளிவாய்க்காலில் ஒரு பகுதியினர் ஒன்றிணைவார்கள். அவ்வாறே உணர்வு பூர்வமாக, மானசீகமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அந்த நாளில் ஒன்றிணைய வேண்டும் என்று சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுக்கின்றது.

எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. அவை தாயகத்தில் மட்டுமல்ல உலகப் பரப்பெங்கும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. வடக்குக் கிழக்காய் சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தை அவை உணர்வு பூர்வமாகப் பிணைக்கவல்லன.

அதனால்தான் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கும் பரிமாறுவதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.குறிப்பாக கடந்த ஆண்டிலிருந்து கிழக்கில் நினைவேந்தலுக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வருவது தற்செயலானது அல்ல.

வடக்கும் கிழக்கும் உணர்வுபூர்வமாக இணைவதை, தமிழர்களின் தாயகம் ஓருணர்ச்சிப் புள்ளியில் ஒன்றிணைவதைத் தடுக்க விரும்பும் சக்திகள் கிழக்கில் நினைவேந்தலைத் தடுக்கின்றன.

இந்த அடிப்படையில் திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகிய எமது உறவுகளோடு தமிழ் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு தன் தோழமையை உறுதிப்படுத்துகின்றது.

அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றது. ஜனாதிபதி தற்போது முனைப்புக் காட்டும் உண்மை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஏன் நம்ப முடியாது என்பதற்கு மேற்படி கைது நடவடிக்கைகள் போதிய சான்றுகள் ஆகும்.

நினைவேந்தலை ஆகக் கூடிய மட்டும் பரவலாக்குவதும் தொடர்ச்சியானது ஆக்குவதும்தான் இத்தருணத்தில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியவை.

கிழக்கில் ஒரு ஊரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடுத்தால் ஏனைய எல்லா ஊர்களிலும் அதை பரவலாக்க வேண்டும்.

வரும் 18 ஆம் திகதி நமது சிவில் சமூக கூட்டிணைவில் வரும் அனைத்து சிவில் சமூகங்களும் தத்தமது எல்லைகளுக்கு உட்பட்டு தத்தமது பிரதேசங்களில் நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறும் நினைவேந்தும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுக்குமாறும் வேண்டுகிறோம்.

மே 18, தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிப் புள்ளியில் இணைக்கின்றது. அது தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வு பூர்வமாகப் பாதுகாக்கின்றது.

அவ்வாறு தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் உறுதிப்படுத்தும் விதத்தில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நமது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு முன்வைக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உணர்வு பூர்வமாகத் திரளும் தமிழர்கள் அல்லது முள்ளிவாய்க்காலை நோக்கி உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், அதேபோல வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் மக்களின் தேசியத் திரட்ச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுக்கின்றது.

அண்மைய பதிவுகள்