புலிகளின் காலத்தில் பெண்களுக்கு உச்ச பாதுகாப்பு இருந்தது - நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
நள்ளிரவிலும் பெண்கள் பாதுகாப்புடன் நடமாடும் சூழல் இருந்தது. இன்று எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர்கேட்டினைத் தடுக்க ஓர் இரும்புக்கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம்(28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நான் வடக்கின் முதலமைச்சராக இருந்திருந்தால் பாடசாலை மாணவிகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு கடும் நடவடிக்கை எடுத்திருப்பேன்.
வடக்கு மாகாணத்தில் இன்று இவ்வாறான சீர்கேடுகள் இடம்பெறுவது வெட்கித் தலைகுனியும்படியான விடயமாகவே இருக்கின்றது.
ஏனெனில், தமிழ் மக்கள் ஒழுக்கமான இனமாக இருந்தவர்கள். அவ்வாறே கருதப்பட்டவர்கள்.
ஒரு பெண் நள்ளிரவில் நகைகளை அணிந்துகொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்றுவரக்கூடிய நிலை என்று தோற்றம் பெறுகின்றதோ அன்று தான் எமக்குச் சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொன்னார்.
கிட் டத்தட்ட அவ்வாறான நிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்தது. இப்பொழுது அனைத்தும் மாறிவிட்டது.
இன்று போதை தலைவிரித்தாடுகின்றது. இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், வான்படையினர் வடக்கில் முகாமிட்டிருந்தும் போதைப்பொருள்கள் எந்தத் தடையும் இல்லாமல் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன.
சீர்கெட்டுப்போயுள்ள இந்த சமூகத்தை மீட்பதற்கு இரும்புக்கரம் தேவை என்றார்.