51 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போனமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான 51 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போனமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (22) நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இது தொடர்பில் அறிக்கை செய்ததோடு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிசிர குமார ஜயவீரவின் முறைப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான (513,644,500) பெறுமதியான நீர் மானிகள் காணாமல்போயுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.