வடக்கு, கிழக்கு வெள்ள அனர்த்தத்துக்கு பிரான்ஸ் தமிழர் வர்த்தகர் சங்கம் உதவி
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு பிரான்ஸ் தமிழர் வர்த்தகர் சங்கத்தினால், உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தமிழர் வர்த்தகர் சங்க தலைவர் சிறீதரன் தலைமையில், உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் நேற்று முன்தினம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத் தில் ஐயங்குளம், புத்துவெட்டுவான், இருட்டுமடு, மூங்கிலாறு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பத்தினர், முன்னாள் போராளிகள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை வவுனியா மாவட்டதிலும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால், உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் தேக்கவத்தை, தவசிக்குளம், தோணிக்கல், வெளிக்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
நாளை, வாகரை பிரதேச செயலக பிரிவில், கதிரவெளி மற்றும் கட்டுமுறிவு பகுதியில், தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கப்படவுள்ளதாக, பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கம் குறிப்பிட்டுள்ளது.