இலங்கை இந்தியாவுக்கும் இடையே 5 பில்லியன் டொலர் ரயில் பாதை இணைப்பு திட்டம்.-- சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான நெடுஞ்சாலை, ரயில் பாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்கும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இலங் கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸநாயக்க பொறுப்பேற்றுள்ளதை அடுத்து அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரும் இரு தரப்புத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரகீர்த்தி மேலும் தெரிவிக்கையில்-
கடந்த மாதம் நான் இந்தியாவில் கூட்டமொன்றில் கலந்து கொண்டேன்.
நாங்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கும் இலங்கையின் திருகோணமலைக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றையும், ரயில் பாதை ஒன்றையும் அமைக்கவுள்ளோம்.
இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாலேயே இது குறித்து திட்டமிடப்படுகிறது.
ரயில், தரைப் பாதையை அமைத்தால் இரு தரப்பினருக்கும் அது உதவியாக அமையக்கூடும்.
ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்திற்கு அது உதவும்.
இந்திய வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து நன்மையை பெறமுடியும்-என்றார்.