இலங்கையில் இனப்படுகொலை. கனடாவின் கருத்தை நிராகரித்த இலங்கை
கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று தெரிவித்த கருத்துகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், அவருடைய கருத்துகளுக்கு மறுப்பும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
33 நாடுகளால் பயங்கரவாத அமைப்பு எனப் பிரகடனப்படுத்தப்பட்ட, தனிநாடு கோரிப் போராடிய புலிகள் இயக்கத்துக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தம் செய்தது.
கனேடியப் பிரதமரின் கூற்று புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும்.
இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர் இன மக்கள் அனைவருமே யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் புலிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்கையில், கனேடியப் பிரதமரின் கூற்று இனங்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பாதிக்கும்.
எமது வரலாற்றைப் பிழையாகக் கூறும் கனேடியப் பிரதமரின் கூற்று சமூக ஊடகங்கள் ஊடாக எதிர்காலச் சந்ததியினருக்குப் பிழையான தகவலையே வழங்கும்.
இலங்கையில், சமாதானத்தை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கனேடிய அரசாங் கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
யுத்தம் நடைபெற்றபோது யுத்தம் நடை பெற்ற பிரதேசத்தில் சிக்குண்ட மக்களுக்கு உணவு, மருந்து என்பவற்றை நாங்கள் ஒழுங்காகவும் திட்டமிட்ட வகையிலும் ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினூடாகவும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களி னூடாகவும் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம்.
புலிகள் மனிதக்கேடயங்களாக பாவித்த பொதுமக்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வெளியேற்றினோம்.
இலங்கையின் முன்மாதிரியான தமிழ்த் தலைவர் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் திட்டமிட்டுக் கொலை செய்தனர் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம் - என்றுள்ளது.