தடைசெய்யப்பட்ட வலைகளுக்கு பிரதேச செயலகம் அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள், வலைகளை திருப்பி கையளிக்கவுள்ளனர்

3 hours ago


தடைசெய்யப்பட்ட, தரமற்ற வலைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் கொள்வனவு செய்து அதிக வரி விதித்ததாக கூறி உடுத்துறை மீனவர்கள், மீன்பிடி வலைகளை திருப்பி கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வலை கொள்வனவு செய்ய ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக மீன்பிடி வலைகள் கொள்வனவு செய்யப்பட்டு பயனாளிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, பயனாளிகளால் வலைகள் தரமற்றவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கிட்டு, "வலையில் தங்கூசி கலந்திருப்பதால் இது பயன்பாட்டுக்கு உகந்தது இல்லை. இது ஒரு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையாகும்.

உரிய தரம் கொண்ட கப்பல் பீஸ் எனப்படும் முழு வலையின் பெறுமதி 16, 400 ரூபாயாகும்.

குறித்த வலையை மட்டுமே கொள்வனவு செய்யுமாறு பிரதேச செயலகத்திடம் தெரிவித்திருந்தோம்.

ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. தரமற்ற, பாவனைக்கு உதவாத வலையை தந்துள்ளனர்.

வலையில் தங்கூசி கலந்திருப்பதால் பயனாளிகள் வலை வேண்டாமென கூறியுள்ளனர்.

மேலும், வலைக்கு 18 வீதம் தனியாக வரி விதிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் இந்த செயற்பாட்டை ஓர் ஊழலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எமக்கு வந்த அனைத்து வலைகளையும் திருப்பி அனுப்புவதாகவும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் நாங்கள் கூறிய தரம் கொண்ட வலைகளை கொள்வனவு செய்து வழங்க வேண்டும்"- என்றார். 

அண்மைய பதிவுகள்