எமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரம். சிற்றி காட்வெயார் உரிமையாளர் தெரிவிப்பு
எமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் எமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளார் என சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாங்கள் 65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை நாம் செய்து வருகிறோம்.
இவ்வாறான நிலையில் எமது நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் சுண்ணக் கற்களை திருகோணமலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாவகச்சேரியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வீதியின் குறுக்காக தனது வாகனத்தை நிறுத்தி மறித்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்தும் வகையில் தனது வாகனத்தை எமது வாகனத்துக்கு முன்னால், பிரதான வீதியில் நிறுத்தி சாரதியை மிரட்டி வாகன திறப்பை வாங்கியமை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு.
1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1) (2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது.
முதலாவது பிரிவானது கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி, எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் என்பவற்றை பற்றி கூறுகிறது.
அதன் பிரகாரம் கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.கல் உடைக்கும் ஆலைகள் தமது வியாபார நிலையத்தை பதிவு செய்துள்ளார்கள்.
மத்திய சுற்றடல் அதிகார சபையின் அனுமதி பெற்றுள்ளார்கள். அது மட்டுமல்லாது கனியவளத் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள்.
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.
இவ்வாறு சகல அனுமதிகளும் பெற்றவர்களிடமிருந்து நாம் கல்லை மட்டும் வாங்குகிறோம்.
நாம் கிடங்கு கிண்டுவதோ அல்லது கல்லை உடைப்பவர்களோ அல்லர்.
முறைப்படி அனுமதி பெற்றவர்களிடமிருந்து பணம் கொடுத்து அவர்களின் கல்லை வாங்கி திருகோணமலைக்கு கொண்டு செல்கிறோம்.
அதில் நாமும் சிறிய இலாபம் அடைவதோடு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கல் ஆலைகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்து வருகிறோம்.
இலங்கைச் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் அன்றிலிருந்து இன்றுவரை இடம்பெற்று வரும் நிலையில் இதை அறியாத சிலரின் தூண்டுதலின் பேரில் எமது நிறுவனத்தையும் எமது வியாபாரத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இளங்குமரன் எம்.பி செயல்பட்டிருக்கிறார்.
பிரிவு இரண்டின் பிரகாரம் அரை கனியங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி தேவையில்லை.
இதை அறியாத இளங்குமரன் எம்.பி எமது வாகனத்தை மறித்து கற்களுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு உறையினை கிழித்து சட்டத்தை தன் கையில் எடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கடற்தொழில் அமைச்சரை சந்திப்பதற்கு சென்றேன். அவர் அங்கு இல்லை.
எனது ஆதாரங்களை அவரது அலுவலகத்துக்கு சமர்ப்பித்தேன். அதனை ஆராய்ந்த அவரது அலுவலக உத்தியோத்தர் அமைச்சரிடம் குறித்த விடயம் தொடர்பில் கூறினார்.
அதன் பின்னர் என்னிடம் பேசினார்.
நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு செய்வதை செய்யுங்கள் எனக் கூறினார்.இது எனக்கு ஆறுதல் அளித்தது.
ஆகவே மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல - என்றார்.