2024 இல் 100 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 61 பேர் கொலை, 47 பேர் காயம் பொலிஸார் தெரிவிப்பு
கடந்த 2024 ஆம் ஆண்டு 100 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
16 பேர் கொல்லப்பட்ட மற்ற 47 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வெவ்வேறு காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டிசெம்பர் 28 ஆம் திகதி மாலையில் பதிவாகியிருந்தது.
சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.
தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.