தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குவது மிக முக்கியம் -- சிவில் சமூக அமையம் வலியுறுத்து.

2 months ago



தேர்தல் கால கூட்டிணைவுகளுக்கு அப்பால் தமிழர் தேசம் முகங் கொடுக்கக் கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குவது மிக முக்கியமானதாகும்.

அதன்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்வைக்கப்படக் கூடிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் கருத்தொருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

அப்போது நிலைப்பாடானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலும், தமிழர் தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை மற்றும் வடக்கு - கிழக்கு தாயகம் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு ஆகிய விடயங்களில் விட்டுக் கொடுப்பின்றியும் அமைய வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதைத் தமது பாராளுமன்றப் பதவிக் காலத்துக்கான செயல்திட்டங்களில் ஒன்றாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருந்தது.

இருப்பினும், அரசியலமைப்பு தீர்வு தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் கடந்தகால நிலைப்பாடுகள், அந்தத் தீர்வு ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை என்பதே உண்மையாகும்.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு நிர்ணய சபை அல்லது பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வடிவத்திலோ புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்மொழியக்கூடிய சாத்தியப்பாடு உள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியை தமிழ்த் தேசமாக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது பற்றி நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

யாப்புருவாக்க முயற்சி குறித்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை.

மாறாக இவ்விடயத்தில் நாம் தயார் நிலையில் இருப்பது அவசியமாகும். கடந்த பொதுத்தேர்தலில் வட, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கணிசமான அளவில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

குறிப்பாக வரலாற்றில் முதற் தடவையாக தமிழ்த் தேசியக் கட்சி அல்லாத ஒரு கட்சி வட, கிழக்கில் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களைப் பெற்றமையை பலரும் கரிசனையுடன் அவதானித்துள்ளனர்.

அதேவேளை பொதுத்தேர்தல் முடிவுகள், தமிழ்த் தேசிய கருத்தியலை மக்கள் மறுதலிக்கவில்லை என்பதையும், மாறாக அவர்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் தொடர்பில் அடைந்திருக்கும் சலிப்பே தேசிய மக்கள் சக்திக்கான வாக்குகளாக மாறியிருக்கிறது என்பதையும் புலப்படுத்துகின்றன.

எனவே தேர்தல் கால கூட்டிணைவுகளுக்கு அப்பால், தமிழர் தேசம் முகங் கொடுக்கக் கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இயங்குவது மிக முக்கியமானதாகும்.

அதன்படி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பாராளுமன்றத்தின் ஊடாக முன்வைக்கப் படக்கூடிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் கருத்தொருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதன்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சியானது வரவேற்கப்பட வேண்டியதும். ஆதரவு வழங்கப்பட வேண்டியதுமான முயற்சியாகும்.

இதற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிட்டுள்ளமையும், இம் முயற்சியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பங்கெடுக்கத் தயாராக உள்ளமையும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதன் நீட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இந்த முயற்சியில் இணைந்துகொள்ள வேண்டும் என நாம் பகிரங்க அழைப்பு விடுக்கிறோம்.

ஏற்கனவே தமிழ் சிவில் சமூக அமையத்தின் பங்கேற்புடன் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சுகளை ஆரம்பிக்கலாம் என்பதே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடாகும்.

தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்காத போதிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்று ரீதியான நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அவை தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவுகளிலிருந்து மாறுபட்டவை அல்ல எனக் கருதுகிறோம்.

இருப்பினும் இம்முயற்சியில் தமிழரசுக்கட்சி பங்குபற்றவில்லை எனும் கருத்து முன்வைக்கப்படுவதனால், காலத்துக்குக் காலம் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் முன்மொழியப்பட்ட நகல் வரைபுகளையும் இப்பேச்சுகளின் உள்ளீடாகப் பயன்படுத்தலாம்.

ஆனால் இப்பேச்சுகள் 2015-2019ஆம் ஆண்டுக்கு இடைக்கப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையையோ அல்லது அச்செயன்முறையின் போது நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையையோ அடிப்படையாகக் கொண்டு அமைய முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

“ஏக்கிய இராச்சிய" எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அம் முன்மொழிவுகளை பொது நிலைப்பாட்டை அடைவதற்குரிய தேடலுக்கான ஓர் உள்ளீட்டு ஆவணமாகக் கருதவேண்டிய அவசியமில்லை.

அதேபோன்று எட்டப்படுகின்ற பொது நிலைப்பாடானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலும், தமிழர் தேசம், சுயநிர்ணய உரிமை, இறைமை மற்றும் வட, கிழக்கு தாயகம் அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பு ஆகிய விடயங்களில் விட்டுக்கொடுப்பின்றியும் அமைய வேண்டும் - என்றுள்ளது.