ஈழத் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராடிய மாவை இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆறாத் துயரை அளிக்கிறது -- வைகோ இரங்கல்

ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வாழ்நாள் முழுவதும் போராடிய மாவை சேனாதிராஜா, உடல் நலக் குறைவு காரணமாக தனது 82 ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி ஆறாத் துயரை அளிக்கிறது.
தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரங்கலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சோமசுந்தரம் சேனாதிராஜா என்ற இயற்பெயரைக் கொண்டவர். இலங்கை பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், சிறு வயதிலேயே தமிழ் ஈழ விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுத்தார்.
ஈழத்தின் தந்தை செல்வாவை நிறுவனராகக் கொண்ட தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் 1961ஆம் ஆண்டில் முதன் முதலாகக் களம் இறங்கிப் போராடினார்.
அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் இணைந்து பணியாற்றினார்.
அந்தக் கட்சியின் ஈழத் தமிழர் இளைஞர் இயக்கச் செயலாளராக 1966 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை மிகச்சிறப்பாகப் பணியாற்றினார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றி, 2024 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவைகள் இணைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரோடும் தோழமையுடன் இணைந்து பணியாற்றினார்.
இலங்கை அரசின் அடக்கு முறைக்கு எதிராக போராடியதால், ஏழு ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
2001, 2004, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.
என் மீது அளவு கடந்த பாசமும், நட்பும், தோழமையும் கொண்டிருந்த அவர், பலமுறை எங்கள் வீட்டில் சந்தித்து விருந்துண்டு அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈழத்தமிழர் விடுதலை என்பது நிறைவு பெறாத போராட்டமாக இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் சங்கடங்களும், சவாலும் நிறைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் சேனாதிராஜாவின் மறைவு ஈழத்தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்த துயரில் தவிக்கும் அவரது இயக்கத்தினருக்கும், இல்லத்து உறவுகளுக்கும், தமிழீழ சொந்தங்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.-என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
