"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே" காட்சிப்படுத்தப்பட்டது.

1 week ago



"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாகை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு  முன்னால் நேற்று காட்சிப்படுத்தப்பட்டது.

குறித்த பதாகைக்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் உரிமை கோரியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்தப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் போது மத்திய குழுக் கூட்டத்துக்கு வருகை தந்தவர்கள் அந்தப் பதாகையைப் பார்வையிட்ட பின்னர் கூட்ட மண்டபத்துக்குள் சென்றிருந்தனர்.

குறித்த பதாகையில், "நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு, யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொள், 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக் குழுவை இயங்க விடு, மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!" - போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.