மறைந்த மூத்த படைப்பிலக்கியவாதி நா.யோகேந்திரநாதனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது

1 day ago



மறைந்த ஈழ மண்ணின் மூத்த படைப்பிலக்கியவாதி நா.யோகேந்திரநாதன் ஐயாவின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் சிறப்புற இடம்பெற்றது.

ஈழத்தின் இலக்கிய, நாடக, திரைப்பட மற்றும் வானொலித் துறை சார்ந்த பன்முக ஆளுமையாளரான நா.யோகேந்திரநாதனின் கலைப் பணிகள் கனதியானவை.

போராட்ட காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான நா.யோகேந்திரநாதனின் 'உயிர்த்தெழுகை நாடகம் ஈழ உணர்வாளர்கள் மத்தியில் அவருக்கான இடத்தை மேலுயர்த்தியிருந்தது.

இன விடுதலை என்ற சத்திய இலட்சியத்தை தன் இதயத்தே சுமந்த ஓர் பேனாமுனைப் போராளியா அதே வீரியத்தையும், விவேகத்தையும் படைப்பிலக்கியம் என்னும் துறைக்குள் ஒருசேர இணைத்து, புனைவுகள் அற்ற போரியல் ஆவணங்களாக தன் படைப்புகளை வெளிக்கொணர்ந்த அவரின் எழுத்துலகப் பணி, ஒரு விடுதலைப் போராளியின் ஆத்மதாகம் நிறைந்த காலப் பெரும் பணியாகவே அமைகிறது.

உலகப் போரியலின் வரலாற்றுத் திருப்புமுனையான ‘குடாரப்புத் தரையிறக்கம்' குறித்துப் பேசும் 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்னும் வரலாற்று நாவலை எழுதி வெளியிட்டுள்ளார்.

ஒரு படைப்பாளன் தன் படைப்புகளின் வழி காலம் உள்ளவரை வாழ்வான் என்பது போல் யோகேந்திரநாதன் ஐயாவும் தமிழ்த் தேசியத்தின் அழியா முகமாக என்றும் எம் நெஞ்சங்களில் நிறைந்தே இருப்பார்.

அவரது நினைவுகளை மீட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், நா.யோகேந்திரநாதனின் குடும்பத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளர்கள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.