கனடாவில் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.
இதனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது.
மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.
என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.
கட்சித் தலைவராகும் நபர், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக களம் காண்பார் என்பதால், அதற்கான தகுதி உள்ள நபரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்தப் போட்டியில் பலர் உள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி முன்னாள் துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி, தொழில்துறை அமைச்சர் பிரான்காய்ஸ் மற்றும் பிரான்சுவா - பிலிப் ஷாம்பெயின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பெயரும் பேசப்பட்டு வருகிறது.
இதே பட்டியலில், மற்றொரு இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆர்யாவும் போட்டியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக் கையில்,
"இலக்கை நோக்கி கனடா பயணிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
நாட்டில் வாரிசு அரசியலை நீக்கிவிட்டு அரசின் தலைவரை நியமிக்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் நாட்டை இறையாண்மைமிக்க குடியரசாக மாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.
கனடாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது.
சிறிய மற்றும் அதிதிறமைமிக்க அமைச்சரவையின் மூலம் நாட்டை மறுகட்டமைப்பு செய்து வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய விழைகிறேன்.
நெருக்கடியில் உள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்வது, நடுத்தர மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது, அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்குவது என பல துணிச்சலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
அந்த வகையில் 2040 இல் ஓய்வு பெறும் வயதை மேலும் இரண்டாண்டுகள் அதிகரிப்பது, குடிமக்கள் அடிப்படையிலான வரிவிதிப்பு முறை அறிமுகம், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டியது போன்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ அரசு அறிமுகப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவராகவும் கனடாவில் வாழும் இந்துக்களுக்கு ஆதரவளிப்பவராகவும் கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரா ஆர்யா அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் சிரா தாலுகாவில் உள்ள துவார்லு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர ஆர்யா. தார்வாட்டில் உள்ள கௌசாலி இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டாவாவுக்குச் சென்ற அவர், முதலில் பொறியாளராகப் பணிபுரிந்தார்.
பின்னர், படிப்படியாக தொழிலதிபராக உயர்ந்தார். 2015இல் ஹவுஸ் ஆஃப் காமன்ஸுக்கு தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அவர் 2019 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2022இல் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கன்னடத்தில் பேசியபோது குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றார்.
அப்போது தனது உரையின் வீடியோவைப் பகிர்ந்துகொண்ட அவர், “கனேடிய நாடாளுமன்றத்தில் நான் எனது தாய் மொழி (முதல் மொழி) கன்னடத்தில் பேசினேன்.
இந்தியாவுக்கு வெளியே உலகின் எந்த நாடாளுமன்றத்திலும் கன்னடம் பேசப்படுவது இதுவே முதல் முறை." என்றும் கூறினார்.
நவம்பர் 2024இல், இந்து பாரம்பரிய மாதத்தை நினைவுகூரும் வகையில் கனடா நாடாளுமன்றத்திற்கு வெளியே 'ஓம்' சின்னத்தைத் தாங்கிய காவி முக்கோணக் கொடியை சந்திர ஆர்யா ஏற்றினார்.
இந்து கனேடியர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஆர்யா, காலிஸ்தான் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்,
இது அவரது சொந்த லிபரல் காக்கஸ் உறுப்பினர்கள் உட்பட மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அடிக்கடி முரண்படுகிறது.