வடக்கு - கிழக்கில் பௌத்த மயமாக்கல் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது.-- மட்டக்களப்பு முன்னாள் எம்.பி கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு

3 weeks ago



மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை, வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"மட்டக்களப்பு போதனா மருத்துவ     மனையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று முளைத்துள்ளது.

தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர், பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்.

அந்த வகையில் மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டனத்துக்குரிய நிகழ்வாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது.

அந்த வகையில் கடந்த அரசாங்கத்தில் கூட வடமாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளராக ஒரு சிங்களவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட பொழுது அவர், யாழ்ப்பாண வீதிகளில், சுற்று        வட்டங்களில் புத்தர் சிலையை நிறுவியதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்பின் பிரகாரம் உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிந்திருக்கிறேன்.

அந்த வகையில் புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இனபேதமற்ற ஓர் இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன்  ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள்.

இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா?, அல்லது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை    ஏற்படுத்த வேண்டும் என்ற          தோரணையில் இந்த தாதியர்    பயிற்சிக் கல்லூரியின் அதிபர் செயல்படுகின்றாரா? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. 

எது எவ்வாறாயினும் வடக்கு - கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும்    மட்டக்களப்பு போதனா மருத்துவ மனைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திர மல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இல்லாவிட்டால் தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே, இந்த மக்கள் மீது அக்கறை கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் மாத்திரமல்ல, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் பணிபுரியும் ஏனையோரினதும் தமிழர்களினதும் ஆதங்கமாக பார்க்கப்படுகிறது.

எனவே, உடனடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன்"- என்றார்.

அண்மைய பதிவுகள்